க
அணிந்துரை
காண்டகு சிறப்பின் மாண்பெரு நூலாகிய
இதற்குப் பேராசிரியர் இட்ட உரை, பொற்குடத்திற்கு நவமணி இழைத்த நன்னர்ப் பதக்கம் சூட்டியது
போல் விளங்கிக் கற்பார்க்குக் கழிபேருவகை தருகின்றது.
இவ்வுரையாசிரியர் சொற்களுக்கும்
சொற்றொடர்களுக்கும் நயம்பட உரைக்கும் பொருள் நலம் நம் நெஞ்சத்தை ஈர்க்கின்றது.
சான்றாக, விதி என்பதைச் ‘செய்யப்படும் வினையினது நியதி’ என்பார். வஞ்சித்தல் என்பது
மறுமொழியை வெளிப்படையாகக் கொடாது, பிறிதொன்றாகக் கூறுதல் என்பார்.
“பிழைகொண்டு ஒருவிக் கெடாது அன்பு
செய்யின்
பிறவியென்னும்
முழைகொண்டு ஒருவன்செல் லாமைநின்று
அம்பலத்
தாடும் முன்னோன்”
(தி.8 கோவை பா.65)
என வரும் அடிகளின் திருவாக்கில்
முதலடியை ‘ஒருவன் அன்பு செய்யின், (அவனது) பிழைகொண்டு, ஒருவி, கெடாது’ எனக் கொண்டு கூட்டி,
‘அடைந்தார் பிழைப்பின், தலையாயினார் பிழையை உட்கொண்டு அமைதலும், இடையாயினார் அவரைத்
துறத்தலும், கடையாயினார் அவரைக் கெடுத்தலும் உலகத்து உண்மையின், அம்மூவகையும் செய்யாது எனினும்
அமையும்,’ என்று சிறப்புரை வழங்குவார் பேராசிரியர்.
“உய்த்துணர்வோர்” என்னும் தொடருக்கு,
‘வெளிப்படாத பொருளை ஏதுக்களால் உணர்வோர்’ என்று விளக்கம் தருவார்.
உவமைக்கு உவமை கூறல் பிழையென்பர்
தொல்லாசிரியர். “மதிக்கமலம் எழில் தந்தெனப் பொழில் ஆயத்துச் சேர்க” (பா.24) என்னும்
திருவாக்கில், ‘தலைவி தோழியருடன் சேர்தல், சந்திரன் விண்மீன் தொகுதியில் சேர்வதைப்
போன்றது’ என உவமை கூறி, சந்திரனை ‘மதிக்கமலம்’ எனத் தாமரையுடன் உவமை கூறுகின்றார். இஃது
உவமைக்கு உவமை கூறியதன்று என மேற்கொண்ட பேராசிரியர் அதற்கு,
“கமலத்தோடு மதிக்கு ஒத்த
பண்பு வெண்மையும் வடிவும், பொலிவும், மதியோடு தலைமகட்கு ஒத்த பண்பு கட்கு இனிமையும், சுற்றத்திடை
அதனின் மிக்குப் பொலிதலும், இவ்வாறு ஒத்த பண்பு வேறுபடுதலான் உவமைக்கு உவமை யாகாமை அறிந்து
கொள்க” என்று ஏது காட்டுகின்றார்.
|