17
வரைவு முடுக்கம்
17.12 இரவும்பகலும் வரவுவிலக்கல்
இரவும்பகலும் வரவுவிலக்கல் என்பது
இரவுடம்பட்டாள் போன்று பகல்வரவு விலக்கின தோழி, நீ பகல்வரின் அலர்மிகுதி யானெங்களுக்கு
மிக்கபழி வந்தெய்தும்; இராவரின் எவ்வாற்றானு நின்னை யெதிர்ப்படுதலருமையாற் சிறிதும் பயனில்லை;
அதனால் நீ யிருபொழுதும் வரற்பாலையல்லையென இரவும் பகலும் வரவு விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்-
261. சுழியா வருபெரு நீர்சென்னி
வைத்தென்னைத் தன்தொழும்பில்
கழியா அருள்வைத்த சிற்றம்
பலவன் கரந்தருமான்
விழியா வரும்புரி மென்குழ
லாள்திறத் தையமெய்யே
பழியாம் பகல்வரின் நீயிர
வேதும் பயனில்லையே.
261
______________________________________________________________
17.12. இரவும் பகலும்
வரவொழி கென்றது.
இதன் பொருள்; ஐய -
ஐயனே; நீ பகல் வரின் புரி மென்குழலாள் திறத்து மெய்யே பழியாம்-நீ பகல்வரிற் சுருண்ட மெல்லிய
குழலையுடையாடிறத்து மெய்யாகவே அலருண்டாம்; இரவு ஏதும் பயன் இல்லை-இராவரின் எதிர்ப்படுத
லருமையாற் சிறிதும் பயனில்லை; அதனான் நீயிருபொழுதும் வாரல் எ-று.
சுழியா வரு பெரு நீர் சென்னி வைத்து
- சுழியாநின்று வரும் பெரியநீரைச் சென்னியின்கண் வைத்து; தன் தொழும்பின் என்னைக் கழியா
அருள் வைத்த - தனக்குத் தொண்டுபடுதற்கண் என்னை நீங்காத தன்னருளான்வைத்த; சிற்றம்பலவன்
கரம்தரும் மான் விழியா வரும் புரி மென்குழலாள் - சிற்றம்பலவனது கரத்தின்கண் வைக்கப் பட்ட
மான்போல விழித்துவரும் புரிமென்குழலாளெனக் கூட்டுக.
பரந்துவரும் பெரும்புனலை வேகந்தணித்துத்
தன் சென்னியின்கண் வைத்தாற் போல நில்லாது பரக்கு நெஞ்சை யுடையேனைத் தன்னருட்க ணடக்கினானென்பது
கருத்து. தன்றொழும்பினின்றும் யானீங்காமைக்குக் காரணமாகிய அருட்கணென்னை வைத்தவனெனினு
மமையும். மெய்ப்பாடு: அது. பயன்: இரவுக் குறியும் பகற்குறியும் விலக்கி வரைவுகடாதல்.
261
|