த
திருக்கோவையார் உரைமாட்சி
பண்டித வித்துவான் தி. வே.
கோபாலையர்
திருக்கோவையார் உரையாசிரியர்
பற்றிய பல கருத்துக்கள்:
எட்டாந் திருமுறையின் ஒருகூறாய்
விளங்கும் திருக்கோவையார், சைவ சமயாசாரியராகிய மணிவாசக சுவாமிகளால் அருளிச் செய்யப்பட்டதாகும்.
அஃது உரையோடு ஆறுமுக நாவலர் அவர்களால் முதன் முதல் அச்சில் பதிப்பிக்கப்பட்டது. அறுபது ஆண்டுகளுக்கு
முன்னரே அஃது ஐந்து பதிப்புக்களைப் பெற்றுவிட்டது. அவற்றில் அவ்வுரையாசிரியர் பெயர் தெளிவாகக்
குறிப்பிடப்படவில்லை. நூலின் இரண்டாம் பக்கத்தில் ‘இவ்வுரையைப் பிற்கால அறிஞர் பேராசிரியரது
என்பர். முற்காலத்து அறிஞர் பலர் நச்சினார்க்கினியரது என்றனர். தஞ்சைவாணன் கோவை உரையாசிரியர்
சேனாவரையரது என்றனா,்’ என்ற குறிப்பு அச்சிடப்பட்டுள்ளது.
திருக்கோவையார் உரையாசிரியர்
நச்சினார்க்கினியர் அல்லர்:
உரையொடு கூடிய திருக்கோவையார் நாவலர்
பதிப்பைப் பாராட்டிச் சிறப்புப் பாயிரம் வழங்கிய தாண்டவராய சுவாமிகள், மகா வித்துவான்
மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தியாகராஜச் செட்டியார், சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார்,
முருகையப்பிள்ளை ஆகிய அனைவரும் உரையாசிரியரை நச்சினார்க்கினியரென்றே நவின்றுள்ளனர்.
நச்சினார்க்கினியர்
வினையெச்சமே வினைமுற்றாகும் என்னும் கருத்தினர். ‘வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய’ என்னும்
தொல்காப்பியச் சொல்லதிகார எச்சவியல் 61ஆம் நூற்பா உரையில், ‘பெயர்த்தனென் முயங்கயான்-இது
வினையெச்சத் தன்மைத் தெரிநிலைமுற்று. வந்தனை சென்மோ - இது வினையெச்ச முன்னிலைத் தெரிநிலைமுற்று.
முகந்தனர் கொடுப்ப, மோயினள் உயிர்த்த காலை - இவை வினையெச்சப் படர்க்கைத் தெரிநிலைமுற்று’
என்று குறிப்பிடுவர்.
|