பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
489

18

வரை பொருட் பிரிதல்

18.24 அறத்தொடு நிற்றலையுரைத்தல்

    அறத்தொடு நிற்றலையுரைத்தல் என்பது நாண்டுறந்தும் மறையுரைத்தும் வெறிவிலக்குவிக்க நினையாநின்ற தலைமகள், மேலறத்தொடு நிற்பாளாக, அயலாரேசுக; ஊர்நகுக; அதுவேயுமன்றி, யாயும்வெகுள்வளாக, அதன்மேல் நீயுமென்னை முனிவாயாக; நீ தேறாயாகிற் சூளுற்றுத்தருவேன்; யான் சொல்லுகின்ற விதனைக் கேட்பாயாக எனத் தோழிக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

289. யாயுந் தெறுக அயலவ
        ரேசுக ஊர்நகுக
    நீயும் முனிக நிகழ்ந்தது
        கூறுவ லென்னுடைய
    வாயும் மனமும் பிரியா
        இறைதில்லை வாழ்த்துநர்போல்
    தூயன் நினக்குக் கடுஞ்சூள்
        தருவன் சுடர்க்குழையே.

289

_____________________________________________________________

18.24.  வெறித்தலை வெரீஇ வெருவரு தோழிக்
      கறத்தொடு நின்ற ஆயிழை யுரைத்தது.

   
இதன் பொருள்: சுடர்க் குழை - சுடர்க்குழையையுடையாய்; என்னுடைய வாயும் மனமும் பிரியா இறை தில்லை வாழ்த்துநர் போல் தூயன்-எனதுவாயையு மனத்தையும் பிரியாத விறைவனது தில்லையை வாழ்த்துவாரைப்போலத் தூயேன்; நினக்குக் கடுஞ் சூள் தருவன் - நீதேறாயாயின் நினக்குக்கடிய குளுறவையுந் தருவேன்; அயலவர் ஏசுக-அயலாரேசுக; ஊர் நகுக - ஊர் நகுவதாக; யாயுந் தெறுக - அவற்றின்மேலே யாயும் வெகுள்வாளாக; நீயும்முனிக - அதுவேயுமன்றி நீயுமென்னை முனிவாயாக; நிகழ்ந்தது கூறுவல் - புகுந்ததனை யான் கூறுவேன்; கேட்பாயாக எ-று.

   
தூயேனென்றது தீங்குகரந்த வுள்ளத்தேனல்லேனென்றவாறு. தூயனெனக் கென்பது பாடமாயின், எனக்கியான்றூயே னென்றுரைக்க, அறத்தொடுநின்ற-அறத்தொடுகூடிநின்ற. வெரீஇ யுரைத்ததென வியையும். அலங்காரம்: பரியாயம் பொருண்முரணுமாம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: அறத்தொடு நிற்றல்.

289