என
உரைமாட்சி
என்ற தமது கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
திருக்கோவையார் உரையாசிரியரோ
35ஆம் பாடலுரையில் ‘அரன் அம்பலத்தின் இயல்’ - ஆறாம் வேற்றுமைப்புறத்துப் பிறந்த அன்மொழித்
தொகை என்றும், 131ஆம் பாடலுரையில் ‘பொன்னங்கழல் என்பதற்குப் பொன்னானியன்ற கழலையுடையது
என அன்மொழித்தொகைப்பட உரைப்பினும் அமையும்’ என்றும், 134ஆம் பாடலுரையில் ‘எற்றுந்திரை
என்பது சினையாகிய தன் பொருட்கு ஏற்ற அடையடுத்து நின்றதோர் ஆகுபெயர்’ என்றும் 151ஆம்
பாடலுரையில் ‘குரைகழல் அன்மொழித் தொகை’ எனவும் குறிப்பிடலின் இவ்வாசிரியர் ஆகுபெயர் வேறு,
அன்மொழித் தொகை வேறு என்னும் கருத்தினர் என்பது இனிது விளங்கும்.
இவ்வாறெல்லாம் சேனாவரையரொடு
மாறுபடும் கருத்துக்களையுடைய இவ்வுரையாசிரியர் சேனாவரையர் ஆதல் இல்லை.
திருக்கோவையார் உரையாசிரியர்
பேராசிரியர் ஆவர்:
ஆறுமுக நாவலர் திருக்கோவையாரை
உரையோடு பதிப்பித்தபின்னர்ச் சில்லாண்டுகள் கழித்துப் பிரயோக விவேகம் என்ற நூலை அதன்
உரையோடு பதிப்பித்தார். அவ்வுரையில் திருக்கோவையாரின் உரையாசிரியர் பெயர் பேராசிரியர்
என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரயோக விவேகம் 14 ஆம்
காரிகை உரையில் ‘ஆலத்தினால் அமிர்தாக்கிய கோன் என அநபிகித கன்மம் திருதியையில் வந்தது.
ஆலத்தினால் என்னும் திருக்கோவையாருள் (61) பேராசிரியர் சொற்சோதனை செய்து காட்டிய
பாலால் தயிராக்கினான் என்பதும் அது,’ என்றும், 24ஆம் காரிகை உரையில் ‘திருக்கோவையாரில்
பாயின மேகலை (282)யைப் பெயரெச்சம் ஒரு சொல்லாகலின் ஆகுபெயர் என்பர் பேராசிரியர்’ என்றும்,
36ஆம் காரிகை உரையில் ‘கொள்ளப்படாது மறப்பது அறிவில் என் கூற்றுக்களே என்றும் திருக்கோவையாரில்
(87) பேராசிரியர் முதனிலையைப் பிரித்து எழுவாயாக்கி முடித்தலும் காண்க’ என்றும், 39ஆம்
காரிகை உரையில் ‘கற்றில கண்டு அன்னம்’ (பா.97) என்பதில் பேராசிரியர் கண்டு என்பது கற்றலோடு
முடியும் என்பர்’ என்றும், ‘தொழுதெழுவார் வினை வளம் நீறெழ’ என்னும் திருக்கோவையாரில்
(118) பேராசிரியர் தொழா நின்று எழுவார் எனத் துணைவினையாய் உரைப்பர்’ என்றும், கூறியிருக்கும்
செய்திகள் யாவும் ஆறுமுக நாவலர் பதிப்பித்துள்ள திருக்கோவையார் உரையில் காணப்படுதலின்
அவர் பதிப்பித்த திருக்கோவையார் உரை பேராசிரியர் என்பவரால் இயற்றப்பட்டது என்பது
போதரும்.
|