த
உரைமாட்சி
திருக்கோவையார் பேராசிரியர்
தொல்காப்பியப் பேராசிரியரினும்
வேறானவர்:
திருக்கோவையார் உரையாசிரியர்
அலங்காரங்களை 157, 161, 162, 185, 195, 217, 233, 234, 289 ஆகிய பாடல்களின் உரையில்
குறிப்பிடுதலின், உவமையை அணி என்று கூறுவதை மறுக்கும் தொல்காப்பிய உரையாசிரியர் ஆகிய பேராசிரியரினும்
இவர் வேறாதல் தெளிவு.
பழையவுரை:
பேராசிரியர்
குறிப்பிடும் பாட வேறுபாடுகளிலும், சொற்றொடர்க்குப் பிறன்கோட் கூறலாய்க் குறிப்பிடும்
உரைகளிலும் சிலவற்றைக் கொண்டதாய், கொளுக்களுக்கும் பாடல்களுக்கும் பொழிப்புரையாக அமைந்த
உரை ஒன்று தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகார வரலாறு என்ற தலைப்பில்
கூறப்பட்டுள்ளதாய் இந்நூலின் கிளவிக் கொத்து எனப்படும் அதிகாரங்கள் பற்றி நூற்பா அப்பதிப்பில்
இல்லை. இயற்கைப் புணர்ச்சி முதலிய 25 கிளவிக்கொத்துகளிலுமுள்ள கிளவிகளை எடுத்தோதும் நூற்பாக்கள்
யாவும் அப்பதிப்பில் இடம் பெற்றுள்ளன.
பேராசிரியர் பிறன்கோட் கூறலாகக்
கூறும் செய்திகள் சிலவற்றைத் தன்பால் கொண்டுள்ள அவ்வுரை பேராசிரியர் உரைக்கும் முற்பட்டது
ஆகும். அதன்கண் கிளவிக்கொத்துக்கள் பற்றிய நூற்பாக்கள் காணப்படுதலானும், கொளுக்களுக்கு
உரை வரையப்பட்டிருத்தலானும், கொளுக்களும், கிளவிக்கொத்து நூற்பாக்களும் பேராசிரியருக்கு முற்பட்ட
சான்றோரால் ஆக்கப்பட்டன ஆதல் வேண்டும்.
நூற்பாக்களுக்கு உரையும், தலைப்புக்களாகிய
கிளவிகளுக்கு விரிவான விளக்கங்களும் வரைந்தமையே பேராசிரியருடைய பணியாக அமைந்தது.
புறப்பொருளின் உட்பிரிவுகளைத் துறை எனவும், அகப் பொருளின் உட்பிரிவுகளைக் கிளவி எனவும்
கூறலே பழைய மரபு.
அகப்பொருட்பாடல்கள் தலைவன்,
தலைவி, தோழி, செவிலி முதலியோருள் ஒருவர் கூற்றாகவே அமைதலின் அகப்பொருளின் உட்பிரிவைத்
துறை என்னாது கிளவி என்பதே நேரிய மரபாகும். ஆயினும், இன்னார் கூற்று என்னாது, ‘இற்செறிவித்தது’
(133) என்றும், ‘நகர் காவலின் மிகுகழி காதல்’ (258) என்றும், ‘வார்புனலூரன் மகிழ்வுற்றது’
(365) என்றும், ‘கலவிகருதிப் புலவி
|