பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
497

18

வரை பொருட் பிரிதல்

18.30 தேர்வரவுகூறல்

   
தேர்வரவுகூறல் என்பது நற்றாய்க்குச் செவிலி யறத்தொடு நில்லாநிற்ப, அந்நிலைமைக்கட் டலைமகனது தேரொலி கேட்ட தோழி, உவகையோடு சென்று, தலைமகளுக்கு அதன் வரவெடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

295. கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை
        யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்
    புள்ளின மார்ப்பப் பொருதிரை
        யார்ப்பப் புலவர்கடம்
    வள்ளின மார்ப்ப மதுகர
        மார்ப்ப வலம்புரியின்
    வெள்ளின மார்ப்ப வரும்பெருந்
        தேரின்று மெல்லியலே.

295

______________________________________________________________

18.30.  மணிநெடுந் தேரோன் அணிதினின் வருமென
      யாழியன் மொழிக்குத் தோழி சொல்லியது.

   
இதன் பொருள்: மெல்லியல் - மெல்லியால்; கள் இனம் ஆர்த்து உண்ணும் வண் கொன்றையோன் தில்லைக் கார்க் கடல் வாய் - கள்ளை வண்டினங்களார்த்துண்ணும் வளவிய கொன்றைப் பூவையுடையவனது தில்லையை யணைந்த கரியகட லிடத்து; புள் இனம் ஆர்ப்ப - ஆண்டுப் படியும் புள்ளினங்களார்ப்ப; பொருதிரை ஆர்ப்ப - கரையைப்பொருந் திரைகளார்ப்ப; புலவர்கள் தம் வள் இனம் ஆர்ப்ப - அவ்வாரவாரத்தோடு மங்கலங்கூறும் புலவர்க டமது வள்ளிய வினமார்ப்ப; மதுகரம் ஆர்ப்ப-நறுவிரையால் வண்டுகளார்ப்ப; வலம்புரியின் வெள் இனம் ஆர்ப்ப-வலம்புரியினது வெள்ளிய வினமார்ப்ப; இன்று பெருந்தேர் வரும்-இன்று நங்காதலர் பெருந்தேர் வாராநின்றது எ-று.

    கரந்தவொழுக்கத்து மணியொலியவித்து வந்ததேர், வரைந்தெய்த இவ்வரவத்தோடு வருமென மகிழ்ந்து கூறியவாறு. கள் என்பது வண்டினுளொரு சாதியென்பாரு முளர். புள்ளினத்தையும் பொருதிரையையும் அவன் வரவிற்கு உவந்தார்ப்பனபோலக் கூறினாள். இதனை மிகைமொழிப்பாற் படுத்திக் கொள்க. முன்னர்த்