பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
514

20

ஓதற் பிரிவு

20.1 கல்விநலங்கூறல்

   
கல்விநலங் கூறல் என்பது வரைந்துகொண்ட பின்னர் ஓதற்குப் பிரிய லுறாநின்ற தலைமகன், தலைமகளுக்குப் பிரிவு ணர்த்துவானாக மிகவுங் கூற்றாற் கற்றோர் நன்மைக்கெல்லை யில்லாத தன்மைய ராவரெனத் தோழிக்குக் கல்விநலங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

308. சீரள வில்லாத் திகழ்தரு
        கல்விச்செம் பொன்வரையின்
    ஆரள வில்லா அளவுசென்
        றாரம் பலத்துள்நின்ற
    ஓரள வில்லா ஒருவன்
        இருங்கழ லுன்னினர்போல்
    ஏரள வில்லா அளவின
        ராகுவ ரேந்திழையே.

308

_____________________________________________________________

20.1.  கல்விக் ககல்வர் செல்வத் தவரெனச்
     செறிகுழற் பாங்கிக் கறிவறி வித்தது.

   
இதன் பொருள்: ஏந்திழை - ஏந்திழையாய்; சீர் அளவு இல்லாத் திகழ்தரு கல்விச் செம்பொன் வரையின் ஆரளவு இல்லா அளவு சென்றார்-நன்மைக்கெல்லையில்லாத விளங்குங் கல்வி யாகிய மேருக் குன்றத்தினது மிக்கவளவில்லாத வெல்லையை யடைந்தவர்கள்; அம்பலத்துள் நின்ற ஓரளவு இல்லா ஒருவன் இரும் கழல் உன்னினர் போல் - அம்பலத்தின்கணின்ற ஓரளவையுமில்லாத ஒப்பில்லாதானுடைய பெரிய திருவடிகளையறிந்து நினைந்தவரைப் போல; ஏர் அளவு இல்லா அளவினர் ஆகுவர்-நன்மைக் கெல்லையில்லாத தன்மையராவர் எ-று.

   
செம்பொன் வரை யென்றான், தூய்மையும் பெருமையுங் கலங்காமையுமுடைமையால். கற்றதின் மேலுங் கற்க நினைக்கின்றானாதலான், ஆரளவில்லா வளவு சென்றா ரென்றான். ஆரளவு காதமும் புகையு முதலாயின அளவு. ஓரளவென்பது காட்சியும் அனுமானமு முதலாயினவளவு. இது குறிப்பெச்சம். செல்வத்தவர்-இல்வாழ்க்கைச் செல்வத்தவர். அறிவறிவித்தது - அறியப்படுவதனை யறிவித்தது. பாங்கியறிவறி வித்ததென்பது பாடமாயின்,