பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
52

உரைமாட்சி

பாக்களின் விளக்கத்திலும் பாடல்களின் விளக்கவுரைகளிலும் இடைமிடைந்தும் தம் உரையை வரைந்துள்ளமையைக் காண்கின்றோம். தொல்காப்பிய நூற்பாக்கள் 19உம், இறையனார் அகப்பொருள் நூற்பாக்கள் 8உம் இன்று பெயர் அறியமுடியாத அகப்பொருள் நூல்களின் நூற்பாக்கள் 6உம் திருக்கோவையார் உரையில் காணப்படுகின்றன. விளங்கா மேற்கோள் நூற்பாக்கள் இந்நூல் 5ஆம் பாடல் உரையில் ஒன்றும், 70ஆம் பாடலுரையில் மூன்றும், 109ஆம் பாடலுரையில் ஒன்றும், 252ஆம் பாடலுரையில் ஒன்றுமாக எடுத்தாளப்பட்டுள்ளன. சொற்பொருள் விளக்கத்திற்காகக் கலித்தொகை, குறுந்தொகை, புறநானூறு, திருக்குறள், நாலடியார், திருக்குறுந்தொகை, தேவாரம், திருவாசகம், திவாகரம் என்ற நூல்களின் பாடலடிகள் பேராசிரியரால் ஆளப்பட்டுள்ளன.

பாடல்களுக்கு உரை : 

பேராசிரியர் ஒவ்வொரு கிளவியையும் முதற்கண் விளக்கி, பின் அக்கிளவிக்குரிய பாடலுக்குப் பதவுரை வரைவர்; விளக்கவுரையில் சில சொற்றொடர்களுக்கு வேறுவகையாக உரை கூறப்படுமாயின் அவ்வுரையையும் வழங்குவர்; தமக்கு உடன்பாடு இன்றெனினும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் வேறு உரைகளைப் பிறன்கோட் கூறலாகக் கூறவும் செய்வர்; பாட வேறுபாடுகளைக் காட்டி, அவற்றிற்கு இயைபான உரையையும் தருவர்; எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் பற்றிய செய்திகளைச் சுட்டுவர். ஒவ்வொரு பாடலிலும் காணப்படும் மெய்ப்பாடும், அப்பாடலால் அதனிடத்துப் பயிலும் அகப்பொருள் மக்களுக்குக் கிட்டக்கூடிய பயனும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பாடல்களில் அமைந்துள்ள இறைச்சி, உள்ளுறை, ஏனைய உவமம், ஏனைய அணிவகைகள் ஆகியவையும் இவ்வுரையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்: 

 ஒரு சொற்றொடர்க்குப் பதவுரையில் ஒரு பொருளும், விளக்கவுரையில் மற்றொரு பொருளும் வரைந்து இருபொருளுக்கும் ஏற்றவாறு சொற்றொடர் அமைந்திருத்தலைப் பேராசிரியர் தம்முரையில் பல இடங்களிலும் சுட்டிச் செல்வர். 23ஆம் பாடலில் மாணிக்கக்கூத்தன் என்ற தொடருக்குப் பதவுரையில் மாணிக்கம் போலும் கூத்தன் என்று உரைகூறி, விளக்கவுரையில் மாணிக்கத்தைக் கூத்தனுக்கு உவமையாக்காது கூத்தினுக்கு உவமையாக உரைப்பினும் அமையும் என்று வேறுபொருள்கூறியும், மென்தோள் கரும்பினை என்ற தொடருக்குப் பதவுரையில் மெல்லிய தோளையுடைய கரும்பைப் போல்வாளை என்று உரைகூறி