பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
526

23

வேந்தற் குற்றுளிப் பிரிவு

23.1 பிரிந்தமைகூறல்

   
பிரிந்தமைகூறல் என்பது தம்மைவந்தடைந்த வேந்தனுக்குத்தா முதவிசெய்வாராக வெய்ய போரையுடைய பாசறைமேல் நமர் சென்றார்; இனி யவ்வேந்தன் பகைவரா லிடப்பட்ட மதில் இன்றென்னாய் முடியுமோவெனத் தலைமகன் வேந்தற்குற்றுழிப் பிரிந்தமை தோழி தலைமகளுக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

316. போது குலாய புனைமுடி
        வேந்தர்தம் போர்முனைமேல்
    மாது குலாயமென் னோக்கிசென்
        றார்நமர் வண்புலியூர்க்
    காது குலாய குழையெழி
        லோனைக் கருதலர்போல்
    ஏதுகொ லாய்விளை கின்றதின்
        றொன்னா ரிடுமதிலே.

316

_________________________________________________

23.1.  விறல்வேந்தர் வெம்முனைக்கண்
      திறல்வேந்தர் செல்வரென்றது.


   
இதன் பொருள்: மாது குலாய மெல் நோக்கி - மடவழகு பெற்ற மெல்லிய நோக்கத்தையுடையாய்; போது குலாய புனைமுடி வேந்தர் தம் போர் முனைமேல் - பூவழகுபெற்ற பேணிச் செய்யப்பட்ட முடியையுடைய வேந்தர் தமது போரையுடைய பாசறைமேல்; நமர் சென்றார் - நமர் சென்றார்; வண் புலியூர்க் காது குலாய குழை எழிலோனைக் கருதலர் போல் - வளவிய புலியூரிற் காதழகு பெற்ற குழையாலுண்டாகிய எழிலையுடையவனைக் கருதாதாரைப்போல; ஒன்னார் இடும் மதில் இன்று ஏதாய் விளைகின்றது - ஒன்னாராலிடப்பட்ட மதில் இன்றியாதாய் முடியுமோ! எ-று.

   
வினைமுடித்துக் கடிதுமீள்வரென்பதுபயப்ப, ஒன்னாரிடுமதிலின்றே யழியுமென்று கூறினாளாம். கொல்லென்பது அசைநிலை. சென்றாரெனத் துணிவு பற்றி இறந்தகாலத்தாற் கூறினாள். திறல் வேந்தரென்றது, சாதிபற்றியன்று; தலைமை பற்றி. மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: வேந்தற்குற்றுழிப் பிரிவுணர்த்துதல்.

316