ப
உரைமாட்சி
பகுதிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
சைவநூற்பயிற்சி :
சைவ சமயாசாரியராகிய மணிவாசகப்
பெருமானால் அருளப்பட்ட இந்நூற்பாடல்களில் சைவ சமயக்கருத்துக்கள் நிறைந்துள்ளன. உரையாசிரியர்
அவற்றை விளக்கிச் செல்லுதலோடு ஏற்ற இடங்களில் தேவார திருவாசக மேற்கோள்களைப் பெய்து
அவற்றிற்கு வலி சேர்க்கின்றார்.
112ஆம் பாடலில் ‘தன் ஒரு பாலவள்
அத்தனாம் மகனாம் தில்லையான்’ என்பதற்குத் தனதொருபாகத்துள்ளாகிய அவட்குத் தந்தையுமாய்
மகனுமாம் தில்லையான் என்று பொருள் கூறி, சிவதத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின்
அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும்
கூறினார் என்று அதற்கு விளக்கம் தந்து அதனை நிலை நிறுத்த ‘இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன்
மகன் தகப்பன்’ என்ற தி. 8 திருவாசகத் திருப்பொற்சுண்ணப் பகுதி 13ஆம் பாடலடியை மேற்கோளாக
எடுத்தாள்கின்றார்.
இருவேறு உரைகள் :
பேராசிரியர் பதவுரையில் ஒரு
பொருளையும், ஆழ்ந்து நோக்கத் தோன்றும் வேறும் ஒரு பொருளை விளக்கவுரையிலுமாகச் சில பாடல்களுக்கு
இருவேறு உரைகளை வரையும் இயல்பினர் ஆவர்.
சான்றாக 158ஆம் பாடலில் ஒலியாநின்ற
அருவியால் பெருகுகின்ற சுனைப்புனற்கண் அன்றியான் வீழ்ந்து கெடப்புகப் பற்றி எடுத்துக் கரைக்கண்
உய்த்த பெரியோர்க்குச் சிறியேனாகிய யான் சொல்லுவதோர் மாற்றமறியேன் என்று பதவுரையிற்
கூறி, பிறவிக் குட்டத்தியான் விழுந்து கெடப்புகத் தாமே வந்து பிடித்தெடுத்து அதனினின்றும்
வாங்கிய பேருதவியார்க்குச் சிறியேனாகிய யான் சொல்வதறியேன் என்று வேறும் ஒரு பொருள் தோன்றியவாறு
கண்டு கொள்க என்று விளக்கவுரையிற் கூறியுள்ளமை காண்க.
உரையிடை உவமை :
சொல்லும் செய்தியைத்
தக்க உவமையை இடைப் பெய்து இனிது விளக்குந் திறம் இவ்வுரையில் ஆங்காங்குக் காணலாம். 149
ஆம் பாடலுரையில் எமது வாழ்பதி இவ்வொழுக்கத்தைச் சிறிது அறியுமாயின் சிந்தையாலும் நினைத்தற்கரிய
துயரத்தைத் தருமாதலால், தாம் செத்து உலகாள்வார் இல்லை; அது போல இவ்வொழுக்கம் ஒழுகற்பாலீரல்லீர்
என்று மறுத்துக் கூறியவாறாயிற்று
|