பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
556

24

பொருள் வயிற் பிரிவு

24.11 நெஞ்சொடு நோதல்

   
நெஞ்சொடு நோதல் என்பது மீள நினைந்த தலைமகன், பின்னும் பொருண்மேற் செல்லாநின்ற வுள்ளத்தனாய் நின்று மீளமாட்டாது, இவ்விரண்டனுள் இப்பொழுது நீயேதுக்குப்போக முயல்கின்றாயெனத் தன்னெஞ்சொடு நொந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

342. பொன்னணி யீட்டிய ஓட்டரும்
        நெஞ்சமிப் பொங்குவெங்கா
    னின்னணி நிற்குமி தென்னென்ப
        தேஇமை யோரிறைஞ்சும்
    மன்னணி தில்லை வளநக
        ரன்ன அன் னந்நடையாள்
    மின்னணி நுண்ணிடைக் கோபொருட்
        கோநீ விரைகின்றதே.

342

_________________________________________________

24.11.  வல்லழற் கடத்து மெல்லியலை நினைந்து
      வெஞ்சுடர் வேலோன் நெஞ்சொடு நொந்தது.


   
இதன் பொருள்: பொன் அணி ஈட்டிய ஓட்டரும் நெஞ்சம் - பொற்றிரளை யீட்டுவா னோட்டந்தருநெஞ்சமே; நீ விரைகின்றது -இப்பொழுது நீ விரைகின்றது; இமையோர் இறைஞ்சும் மன் அணி தில்லை வளநகர் அன்ன - இமையோர் சென்று வணங்கும் மன்னனது அழகிய தில்லையாகிய வளநகரையொக்கும்; அன்ன நடையாள் மின் அணி நுண் இடைக்கோ - அன்னத்தினடை போலு நடையை யுடையாளது மின் போலும்  நுண்ணிய விடைக்கோ; பொருட்கோ - எடுத்துக்கொண்ட பொருட்கோ, இரண்டற்குமல்லவோ; இப்பொங்கு வெங்கானின் நணி நிற்குமிது என் என்பது - இவ்வழல் பொங்கு வெங்கானத்தைச் சேர்ந்து போவதும் மீள்வதுஞ் செய்யாது நிற்கின்ற விஃதியாதென்று சொல்லப்படுவது? எ-று.

   
நண்ணியென்பது நணியென விடைக்குறைந்து நின்றது. அணியென்று பிரித்து வெங்கானின்கணணித்தாக நிற்பதென்றுரைப் பினுமமையும். இமையோரிறைஞ்சுந் தில்லைவளநகரெனவியையும்.

342