பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
557

24

பொருள் வயிற் பிரிவு

24.12 நெஞ்சொடு புலத்தல்

   
நெஞ்சொடு புலத்தல் என்பது நெஞ்சொடு நொந்து கூறாநின்றவன், பேயிடத்துஞ்செய்தலரிதாம்பிரிவை இவளிடத்தே யெளிதாக்குவித்துச் சேய்த்தாகிய இவ்விடத்துப் போந்த நினது சிக்கனவு அஞ்சத்தக்கதெனப் பின்னும் அந்நெஞ்சொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

343. நாய்வயி னுள்ள குணமுமில்
        லேனைநற் றொண்டுகொண்ட
    தீவயின் மேனியன் சிற்றம்
        பலமன்ன சின்மொழியைப்
    பேய்வயி னும்மரி தாகும்
        பிரிவெளி தாக்குவித்துச்
    சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத்
        தக்க துன் சிக்கனவே.

343

_________________________________________________

24.12.  அழற்கடத் தழுக்கமிக்கு
       நிழற்கதிர்வேலோன் நீடுவாடியது.

   
இதன் பொருள்: நாய் வயின் உள்ள குணமும் இல்லேனை நல் தொண்டு கொண்ட - நாயினிடத்துள்ள நன்மையுமில்லாத வென்னை நல்ல தொண்டாகக்கொண்ட; தீவயின் மேனியன் சிற்றம்பலம் அன்னசில் மொழியை - தீயிடத்து நிறம்போலு நிறத்தை யுடையவனது சிற்றம்பலத்தையொக்குஞ் சிலவாகிய மொழியை யுடையாளிடத்து; பேய் வயினும் அரிதாகும் பிரிவு எளிதாக்குவித்து; பேயினிடத்துஞ் செய்தலரிதாம் பிரிவை எளிதாக்குவித்து-சேய் வயின் போந்த நெஞ்சே - சேய்த்தாகிய இவ்விடத்துப் போந்த நெஞ்சமே; உன் சிக்கனவு அஞ்சத்தக்கது - உனது திண்ணனவு அஞ்சத்தக்கது எ-று.

   
நற்றொண்டென்புழி நன்மை: சாதியடை. சின்மொழியை யென்னு மிரண்டாவது ஏழாவதன்பொருட்கண் வந்தது.

343