பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
558

24

பொருள் வயிற் பிரிவு

24.13 நெஞ்சொடு மறுத்தல்

   
நெஞ்சொடு மறுத்தல் என்பது நெஞ்சொடு புலந்து கூறிப் பின்னும் பொருண்மேற் செல்லாநின்ற வுள்ளத்தோடு தலைமகளை நினைந்து, இத்தன்மைத்தாகிய பொன்னைவிட்டு வேறு பொன்றேடியோ எம்மை வாழச்செய்வது? இதற்கியாமுடம்படேம்; நாமே நடக்கவெனச் செலவுடம்படாது பொருள் வலித்த நெஞ்சொடு மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

344. தீமே வியநிருத் தன்திருச்
        சிற்றம் பலம்அனைய
    பூமே வியபொன்னை விட்டுப்பொன்
        தேடியிப் பொங்குவெங்கான்
    நாமே நடக்க வொழிந்தனம்
        யாம்நெஞ்சம் வஞ்சியன்ன
    வாமே கலையைவிட் டோபொருள்
        தேர்ந்தெம்மை வாழ்விப்பதே.

344

_________________________________________________

24.13.  நீணெறி சென்ற நாறிணர்த் தாரோன்
      சேணெறி யஞ்சி மீணெறி சென்றது.

   
இதன் பொருள்: நெஞ்சம் - நெஞ்சமே; தீ மேவிய நிருத்தன் திருச்சிற்றம்பலம் அனைய - தீயைப்பொருந்திய நிருத்தத்தை யுடையவனது திருச் சிற்றம்பலத்தை யொக்கும்; பூ மேவிய பொன்னை விட்டுப் பொன் தேடி - பூவின்கண்மேவிய பொன்னை விட்டு வேறு பொன்னைத் தேடாநின்று; இப் பொங்கு வெங்கான் நாமே நடக்க - இவ்வழல்பொங்கும் வெங்கானின் நாமே நடப்பீராமின்; யாம் ஒழிந்தனம் - யாமொழிந்தேம்; பொருள் தேர்ந்து எம்மை வாழ்விப்பது - பொருடேடி யெம்மை வாழச் செய்வது; வஞ்சி அன்ன வாம் மேகலையை விட்டோ - வஞ்சியையொக்கு மழகிய மேகலையையுடையாளை விட்டோ? யாமிதற்குடம்படேம் எ-று.

   
இதுவும் பெருந்திணைப்பாற்படும். மீளநினைந்த துணையல்லது மீண்டிலனென்பார் மீணெறியை யுள்ளத்தாற் சென்ற தென்றுரைப்ப. இப்பாட்டு நான்கிற்கும் மெய்ப்பாடு: அச்சம். பயன்: செலவழுங்குவித்தல்.

344