பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
559

24

பொருள் வயிற் பிரிவு

24.14 நாளெண்ணிவருந்தல்

   
நாளெண்ணி வருந்தல் என்பது தலைமகனது வரவுநீட்ட நினைந்து வருந்தாநின்ற தலைமகளது வருத்தங்கண்ட தோழி, இவளை நோய்பொருந்தச் சென்றவர் சென்றநாளை எண்ணுந் தன்மையாற் பலகாலிடுதலின் நிலனுங்குழிந்து விரலுந்தேய்ந்ததென, அவன் சென்றநாளெண்ணி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-

345. தெண்ணீ ரணிசிவன் சிற்றம்
        பலஞ்சிந்தி யாதவரிற்
    பண்ணீர் மொழியிவ ளைப்பையுள்
        எய்தப் பனித்தடங்க
    ணுண்ணீர் உகவொளி வாடிட
        நீடுசென் றார்சென்றநாள்
    எண்ணீர் மையின்நில னுங்குழி
        யும்விர லிட்டறவே.

345

_____________________________________________________________

24.14.  சென்றவர் திறத்து நின்றுநனி வாடுஞ்
       சூழிருங் கூந்தற்குத் தோழிநனி வாடியது.


   
இதன் பொருள்: தெள் நீர் அணி சிவன் சிற்றம்பலம் சிந்தியாதவரின்-தெண்ணீரைச் சூடிய சிவனது சிற்றம்பலத்தைச் சிந்தியாதவரைப்போல வருந்த; பண் நீர் மொழி இவளைப் பையுள் எய்த - பண்ணீர்மையையுடைய மொழியையுடையவிவளை நோய் பொருந்த; பனித் தடங் கண்ணுள் நீர் உக-குளிர்ச்சியையுடைய  பெரியகண்ணகத்து நீர்வார; ஒளி வாடிட-மேனியொளிவாட; நீடு சென்றார் சென்ற நாள் - காலநீடப் பிரிந்தவர் பிரிந்தநாளை; எண் நீர்மையின் இட்டு விரல் அற நிலனும் குழியும்-எண்ணுந்தன்மையாற் பலகாலிடுதலின் விரல்தேய நிலனுங்குழியும்! இனியெங்ஙன மாற்றும்! எ-று.

   
ஒளிவாடினளென்பது பாடமாயின், விரலிட்டென்பதனைத் தோழிமேலேற்றுக.  மெய்ப்பாடு: அழுகை.  பயன்: தலைமகளை யாற்றுவித்தல்.

345