பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
560

24

பொருள் வயிற் பிரிவு

24.15 ஏறுவரவுகண்டிரங்கியுரைத்தல்

   
ஏறுவரவுகண்டிரங்கியுரைத்தல் என்பது பொருண்முற்றி மீளலுறாநின்ற தலைமகன், மாலைக்காலத்து நாகொடுவாரா நின்ற ஏறுவரவுகண்டு, இச்சிறந்த செக்கர்மாலை அவள் பொறுக்குமளவன் றென இரங்கிக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

346. சுற்றம் பலமின்மை காட்டித்தன்
        தொல்கழல் தந்ததொல்லோன்
    சிற்றம் பலமனை யாள்பர
        மன்றுதிண் கோட்டின்வண்ணப்
    புற்றங் குதர்ந்துநன் னாகொடும்
        பொன்னார் மணிபுலம்பக்
    கொற்றம் மருவுகொல் லேறுசெல்
        லாநின்ற கூர்ஞ்செக்கரே.

346

_____________________________________________________________

24.15. நீடியபொன்னின் நெஞ்சம்நெகிழ்ந்து
      வாடியவன் வரவுற்றது.


   
இதன் பொருள்: திண் கோட்டின் வண்ணப் புற்று உதர்ந்து - திண்ணிய கோட்டான் நிறத்தையுடைய புற்றையிடந்து; பொன் ஆர் மணி புலம்ப-இரும்பார்ந்த மணியொலிப்ப; கொற்றம் மருவு கொல் ஏறு - வெற்றியைப் பொருந்தின கொலல்வல்ல ஆனேறு; நல் நாகொடும் செல்லாநின்ற - நல்ல நாகோடும் ஊர்வயிற் செல்லா நின்ற; கூர்ஞ் செக்கர் - சிறக்குஞ் செக்கர்வானையுடைய மாலை; சுற்றம் பலம் இன்மை காட்டி - சுற்றத்தாற் பயனின்மையையறிவித்து; தன் தொல் கழல் தந்த தொல்லோன் சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று - பிறவிமருந்தாதற்குப் பழையவாய் வருகின்ற தன்கழல்களை யெனக்குத் தந்த பழையோனது சிற்றம்பலத்தை யொப்பாளதளவன்று; இனியென்னாகுவள்! எ-று.

   
சுற்றம் பயனையுடைத்தன்மையெனினு மமையும். மண்ணப் புற்றென்பதூஉம் பாடம். நேடியபொன்னி னென்பது பாடமாயின், நேடுதல்-தேடுதல். மெய்ப்பாடு:  அச்சம். பயன்: தேர்ப்பாகன் மீள்வதற்குகொருப் படுதல்.

346