24
பொருள் வயிற்
பிரிவு
24.16 பருவங்கண்டிரங்கல்
பருவங்கண்டிரங்கல் என்பது
ஏறுவரவுகண் டிரக்கமுற்று வாராநின்ற தலைமகன், இம்முகில்கள் ஒன்றோடொன்று தம்மில் விரவுதலாற்
பொழில்கடோறும் மயில்கள் திரண்டாடாநின்ற இக்கார்காலத்து, அவளென்னை நினைந்தாற்றாளாங்
கொல்லோவென அப்பருவங்கண் டிரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்-
347. கண்ணுழை யாதுவிண் மேகங்
கலந்து கணமயில்தொக்
கெண்ணுழை யாத்தழை கோலிநின்
றாலு மினமலர்வாய்
மண்ணுழை யாவும் அறிதில்லை
மன்னன தின்னருள்போற்
பண்ணுழை யாமொழி யாளென்ன
ளாங்கொல்மன் பாவியற்கே.
347
______________________________________________________________
24.16. மன்னிய பருவ முன்னிய
செலவின்
இன்ன லெய்தி மன்னனே கியது.
இதன் பொருள்: விண் மேகம்
கலந்து கண் நுழையாது - விண்ணிடத்து முகில்கள் ஒன்றோடொன்று விரவுதலாற் கண் சென்று நுழையமாட்டாது;
இன மலர் வாய் - இனமலரையுடைய விட மெங்கும்; கண மயில் தொக்கு எண் நுழையாத்தழை கோலி நின்று
ஆலும் - மயிலினங்கள் திரண்டு எண் சென்றுபுகாத பீலியை விரித்து நின்றாடாநிற்கும்; மண் உழையாவும்
அறி தில்லை மன்னனது இன் அருள் போல் - மண்ணிடத்தெல்லாவுயிர்களுமறியுந் தில்லையின் மன்னனது
இனியவருள் போலும்; பண் நுழையா மொழியாள் பாவியற்கு என்னள் ஆம் கொல் - பண்ணணையாத தேமொழியையுடையாள்
தீவினையேற்கு எத்தன்மையளாமோ! அறிகின்றிலேன்! எ-று.
எண்ணென்பது உணவாகிய வெண்ணென்பாருமுளர்.
பண்ணுழையாமொழி யென்பதற்குப் பண்ணப்பட்ட வுழையாகிய நரம்புபோலும் மொழியாளெனினுமமையும். மன்: அசைநிலை.
மன்னிய பருவ முன்னிய செலவின் இன்னலெய்தி - நிலைபெற்ற பருவத்து முற்பட்ட செலவினான் வருத்தமெய்தி.
மெய்ப்பாடும், பயனும் அவை.
347
|