பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
58

உரைமாட்சி

சிதைவு. மணிகண்டன் 81 - வடமொழி இலக்கணத்தால் தொக்குப் பின் திரிந்து நின்றது. இராகம் 194 - வடமொழிச் சிதைவு. கித்தம் 388 -செய்யப்பட்டது என்னும் பொருளதோர் வடமொழித் திரிபு.

உவம உருபின் பொருள்படும் சொற்கள் :

போல, புரைய, ஒப்ப, மான, கடுப்ப போன்று நூல்களில் பயில வழங்கும் உவம உருபுகளே அன்றி வேறு பல சொற்களும் திருக்கோவையாரில் மணிவாசகப் பெருமானால் போலும் என்னும் பொருள் தரும் வகையில் ஆளப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் உரையாசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். அவற்றுட் சில.

கார்தரு பொழில் 32 என்பதில் தரு என்பதும், அரவரு நுண்ணிடை 81 கொளு என்பதில் வரும் என்பதும், கயல்வளர் வாட்கண்ணி 117 என்பதில் வளர் என்பதும் அம்மலர் வாட்கண் நல்லாய் 153 என்பதில் வாள் என்பதும், பொன் செய்த மேனியன் 278 என்பதில் செய்த என்பதும், காந்தளும் பாந்தளைப் பாரித்து அலர்ந்தன 324 என்பதில் பாரித்து என்பதும், பால் செலும் மொழியார் 359 என்பதில் செல்லும் என்பதும் உவமப் பொருளைத் தரும் சொற்களாகும்.

ஒரு சொல் நீர :

சில சொற்றொடர்கள் பொருள் தரும் தன்மையை ஆராய்ந்து அவற்றை ஒரு சொல் நீர என்றும், சில சொற்றொடர்கள் எழுவாய், இரண்டாவது ஆகியவற்றை முடிக்கும் தன்மை கண்டு அவற்றை ஒரு சொல் நீர என்றும் இவ்வாசிரியர் குறிப்பிடுவர். வகைக்குச் சில கீழே காண்பன.

நடுங்க நுடங்கும் 31 - ஒரு சொல் நீர, நடுக்கும் என்னும் பொருளன. கெடக் கொண்டது 138 - ஒரு சொல் நீர, கெடுத்தது என்பது பொருள். கெடச்செய்திடுவான் 141 - ஒரு சொல் நீர, கெடுப்பான் என்பது பொருள். பொடியாய் விழ விழித்தோன் 179 - ஒரு சொல் நீர, பொடியாக்கினான் என்பது பொருள்.

நாணுதல் உரைத்தல் 95 கொளு - என்னும் சொற்கள் ஒரு சொல் நீர்மைப்பட்டு இரண்டாவதனை அமைத்தன. உய்யநின்றோன் 106 - என்னும் சொற்கள் உய்வித்தோன் என்னும் பொருளவாய், ஒரு சொல் நீர்மைப்பட்டு இரண்டாவதற்கு முடிவாயின.

தொடை மடக்கும் 274 ஒரு சொல் நீரவாய்க் குன்றவர் என்னும் எழுவாய்க்கும், கணையை என்னும் இரண்டாவதற்கும் முடிபாம். சீர்வழுத்தா 337 என்பன ஒரு சொல் நீர்மைப்பட்டு அம்பலத்தை என்னும் இரண்டாவதற்கு முடிபாயின.