பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
580

25

பரத்தையிற் பிரிவு

25.10 செவ்வணிகண்டவாயிலவர் கூறல்

   
செவ்வணிகண்டவாயிலவர்கூறல் என்பது தலைமகளிடத்து நின்றுஞ் செவ்வணிசெல்லக்கண்டு, நம்மூரற்கு உலகியலாறுரைப்பான் வேண்டி, செம்மலருஞ் செம்பட்டும் செஞ்சாந்தும் நமது திருவை யுடைய மனையின்கண் வந்து தோன்றினவெனப் பரத்தை வாயிலவர் தம்முண் மதித்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

361. சிவந்தபொன் மேனி மணிதிருச்
        சிற்றம் பலமுடையான்
    சிவந்தஅம் தாளணி யூரற்
        குலகிய லாறுரைப்பான்
    சிவந்தபைம் போதுமஞ் செம்மலர்ப்
        பட்டுங்கட் டார்முலைமேற்
    சிவந்தஅம் சாந்தமுந் தோன்றின
        வந்து திருமனைக்கே.

361

_____________________________________________________________

25.10.  மணிக்குழை பூப்பியல் உணர்த்த வந்த
      ஆயிழையைக் கண்ட வாயிலவர் உரைத்தது.


   
இதன் பொருள்: சிவந்த பொன் மேனி மணி - செம்பொன் போலு மேனியையுடையமணி; திருச்சிற்றம்பலம் உடையான் - திருச்சிற்றம்பலத்தை யுடையான்; சிவந்த அம் தாள் அணி ஊரற்கு - அவனது சிவந்தவழகிய தாள்களை முடிக்கணியாக்கும் ஊரற்கு; உலகியலாறு உரைப்பான்-உலகியனெறியை யறிவிப்பான் வேண்டி; திருமனைக்கு - நமது திருவையுடைய மனைக்கண்; சிவந்த பைம்போதும் - சிவந்த செவ்விப் பூவும்; அம் செம் மலர்ப் பட்டும் - அழகிய செய்ய பூத்தொழிற் பட்டும்; கட்டு ஆர் முலைமேல் அம் சிவந்த சாந்தும் - கட்டுதலார்ந்த முலைமேலுண்டாகிய வழகிய செய்ய சாந்தமும்; வந்து தோன்றின-வந்துதோன்றின; இனித் தருமக்குறை வாராமல் ஊரற்கும் ஏகல்வேண்டும் எ-று.

   
உலகியலாறு - பூப்பு. உரைத்தாற்போலச் செவ்வணியா லறிவித்தலின் உரைப்பா னென்றார். தாளிணை யூரற்கென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: பூப்புணர்த்துதல்.

361