பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
588

25

பரத்தையிற் பிரிவு

25.17 வாயிலவர் வாழ்த்தல்

   
வாயிலவர் வாழ்த்தல் என்பது செவ்வணிவிடுக்கப் பூப்பியற் செவ்விகெடாமல் மெலிவறிந்து இவளது பொலிவோடு வந்தமையான் இவன் மெய்யே தக்கவாய்மையனெனத் தலைமகனை வாயிலவர் வாழ்த்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-

368. வில்லைப் பொலிநுதல் வேற்பொலி
        கண்ணி மெலிவறிந்து
    வல்லைப் பொலிவொடு வந்தமை
        யால்நின்று வான்வழுத்துந்
    தில்லைப் பொலிசிவன் சிற்றம்
        பலஞ்சிந்தை செய்பவரின்
    மல்லைப் பொலிவய லூரன்மெய்
        யேதக்க வாய்மையனே.

368

________________________________________________________________

25.17.  தலைமகனது தகவுடைமை
      நிலைதகுவாயில் நின்றோருரைத்தது.

   
இதன் பொருள்: வில்லைப் பொலி நுதல் வேல் பொலி கண்ணி மெலிவு அறிந்து - விற்போலுநுதலையும் வேல்போலுங் கண்களையுமுடையாளது வாட்டமறிந்து; வல்லைப் பொலிவொடு வந்தமையான் - விரைய இவளது பொலிவோடு வந்தமையால்; வான் நின்று வழுத்தும்; வானத்துள்ளார் நின்றுவழுத்தும் தில்லைப் பொலி சிவன் சிற்றம்பலம் சிந்தை செய்பவரின்-தில்லைக்கட் பொலியும் சிவனது சிற்றம்பலத்தைக் கருதுவாரைப்போல; மல்லைப் பொலி வயல் ஊரன் - வளத்தாற் பொலியும் வயலையுடைய வூரையுடையவன்; மெய்யே தக்க வாய்மையன் - மெய்யாக நல்ல மெய்ம்மையன் எ-று.

    வில்லையென்னுமைகாரம் இசைநிறையாய் வந்தது. காதலன் வர இவள் இடையின்றிப் பொலிந்தமையாற் பொலிவொடென ஒடுக்கொடுத்துக் கூறினார். பொலி சிற்றம்பலமென வியையும். மல்லல்: கடைக்குறைந்து ஐகாரம் விரிந்துநின்றது. மல்லற் பொலி யென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்தல்.

368