பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
60

உரைமாட்சி

நிற்பதோர் இடைச்சொல். தான் செறி இருள் 382-தான் என்பது அதுவன்றி இது ஒன்று என்பதுபட நின்றதோர் இடைச்சொல். ஏழையின் 19-இன் ஏழன் உருபு புறனடையால் கொள்ளப்பட்டது. ஆவ 211,-இரங்கற்குறிப்பு, ஆவா 72-அருளின்கட்குறிப்பு, இரக்கத்தின் கட்குறிப்பு. ஐயோ 384 - உவகைக்கண் வந்தது. அந்தோ 72 - இரக்கத்தின்கட் குறிப்பு. கற்றவா 60 - ஆ-வியப்பின் கட்குறிப்பு. யாதே 82 - ஏகாரம்வினா. பேர் என்னவோ 56 - ஓகாரம் வினா. மன்னும் 174 - மிகுதி.

உரிச்சொற்கள் : 

30ஆம் பாடல் கொளுவில் வய என்னும் உரிச்சொல் விகார வகையால் வயம் என நின்றது என்றும், 208 ஆம் பாடலில் மல்லல் மல் எனக் கடைக்குறைந்து நின்றது  என்றும் 368 ஆம் பாடலில் மல்லல் கடைக்குறைந்து ஐகாரம் விரிந்து நின்றது என்றும் இவ்வுரையாசிரியர் உரிச்சொற்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அன்மொழித் தொகையும் ஆகுபெயரும் : 

அன்மொழித் தொகையும் ஆகுபெயரும் ஒன்றல்ல என்னும் கருத்தினராதலின் இவ்வுரையாசிரியர் அவற்றை ஆண்டாண்டு எடுத்துக்காட்டும் இயல்பினர். சான்றாகச் சிலவற்றைக் காண்போம்.

அரன் அம்பலத்தின் இயல் 35 - ஆறாம் வேற்றுமைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை, பொன்னங்கழல் 131 - பொன்னை ஒக்குங் கழல் என உவமத் தொகை, பொன்னான் இயன்ற கழலை உடையது என அன்மொழித் தொகையும் ஆம். செறிகழல் 273 - செறியும் கழமை உடையது என அன்மொழித்தொகை. முத்தமணல் 273 - முத்துப்போன்ற மணலையுடைய இடம் என அன்மொழித் தொகை. எற்றும்திரை 134 என்பது சினையாகிய தன்பொருட்கு ஏற்ற அடையடுத்து நின்றதோராகுபெயராய்க் கடலைக் குறிப்பிடுகிறது. மாதுற்ற மேனி 174 - என்பது ஆகுபெயராய் மேனியை உடையான் மேல் நின்றதெனினும் அமையும். பாயினமேகலை 282 என்னும் சொற்கள் ஒரு சொல் நீர்மைப்பட்டு மேகலை உடையாளை உணர்த்தலின் ஆகுபெயர் எனப்படும். ஆழிதிருத்தும் புலியூர் 186 - ஆழி என்பது ஆழி சூழ்ந்த உலகைக் குறித்தலின் ஆகுபெயர்.

உருபு மயக்கம்: 

இவ்வுரையாசிரியர் ‘பொருள் செல்மருங்கின் வேற்றுமை சாரும்’ (தொல்; சொல் 107) என்பதற்கேற்ப, ஆளப்பட்டுள்ள வேற்றுமை உருபு பிறிதொரு வேற்றுமைப்பொருளை உணர்த்துவதாகிய உருபு மயக்கத்தை எடுத்துக்காட்டுவர்.