பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
62

உரைமாட்சி

வாய்ந்து என்பது வாய்ப்ப என்பதன் திரிபு ஆகலின் அளிவளர் என்னும் பிறவினை கொண்டது. கொள்ளப்படாது என்பது 87 வினைமுதல் மேலும் செயப்படுபொருள் மேலும் அன்றி வினைமேல் நின்ற முற்றுச்சொல், அகத்தின்னா வஞ்சரையஞ்சப்படும் (குறள் 824) என்பது போல. பைங்கார்வரை மீன்பரப்பி 130 - வினை முதல் அல்லாத கருவிமுதலியன அவ்வினைமுதல் வினைக்குச் செய்விப்பன ஆதலின் பரப்பி எனச் செய்விப்பதாகக் கூறினார், வன்மாக்களிற்றொடு சென்றனர் 338 - களிற்றுத் தானை சிறந்தமையின் ஒடு உயர்பின்கண் வந்ததாம், வேறு வினை ஒடுவாய்க் களிற்றினை உடையவராய்ச் சென்றார் என்பதுபட நின்றது எனினும் அமையும். ஊர்ந்தகளிறு என்று ஒடு கருவிப் பொருட்கண் வந்தது எனினும் அமையும், ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து 74 சாந்தும் எருக்கும் என இரண்டாகலின் ஈசன எனப் பன்மை உருபு கொடுத்தார். விலங்கலைக் கால்விண்டு 24 - விண்டு என்பது பிளந்து என்பது போலச் செய்வதன் தொழிற்கும் செய்விப்பதன் தொழிற்கும் பொது. இத்தகைய அரிய செய்திகள் இவ்வுரையிற்  பல.

குறிப்பெச்சம் : 

பாடலில் இடம் பெறாமல் பாடற்பொருளை நிரப்புவதற்குச் சில சொற்கள் எஞ்சி நிற்பன ஆயின் அவை குறிப்பெச்சம் எனப்படும். சில பாடல்களின் விளக்கவுரையில் உரையாசிரியர் குறிப்பெச்சங்களைச் சுட்டியுள்ளார்.

116ஆம் பாடலுரையில் இது குறிப்பெச்சமாதலின் ஆண்டுவா என்பது கருத்து என்றும் 152ஆம் பாடலுரையில் இவ்வாறு வினாவத் தலைவன் ஒன்றனை உட்கொள்ளும் என்று கருதிக் கூறினமையின் இது குறிப்பெச்சம் என்றும் 163ஆம் பாடலுரையில் இந்தீவரம் இவை காண் என்பது குறிப்பெச்சம் என்றும் சுட்டிச் செல்லும்  பேராசிரியர் பாடலது தலைப்பின் விளக்கத்தில் குறிப்பெச்சச் செய்தி அறியக்கிடத்தலின். குறிப்பெச்சங்களை விரித்து விளக்கவில்லை.

அடைகள் பொருளில வாதல்: 

அடைமொழியாய் நிற்கும் சொல்லின் பொருள் பின்வரும் பிறிதொன்றால் பெறப்படுமாயின், அவ்வடைமொழி பொருளின்றி வாளா நிற்பதாய்க் கூறும் மரபு பற்றி உரையாசிரியர், தன்பூங்கழலின் துணர்ப்போது 17 - பூங்கழல் பூப்போலுங்கழல் என உவமைத் தொகையாய்க் கழல் என்னும் துணையாய் நின்றது என்றும், கருங்கண்ணனை அறியாமை நின்றோன் 53-கண்ணன் என்பது கரியோன் என்றும் பெயரதொரு பாகதச் சிதைவு. அஃது அப்பண்பு குறியாது ஈண்டுப் பெயராய் நின்றமையின் கருங்கண்ணன் என்றார்.