பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
64

கூறுத

உரைமாட்சி

கூறுதலே இவர் பணியாக அமைந்தது. தமது உரையில் இறையனார் அகப்பொருள் நூற்பாக்கள் எட்டனை எடுத்துக்காட்டியுள்ள பேராசிரியர் அந்நூலுரைச் செய்திகள் பலவற்றையும் எடுத்தாண்டுள்ளார். அவற்றுட் சில.

18ஆம் பாடலுரையில் இயற்கைப்புணர்ச்சி எனினும் தெய்வப்புணர்ச்சி எனினும் முன்னுறு புணர்ச்சி எனினும் காமப்புணர்ச்சி எனினும் ஒக்கும். இடந்தலைப்பாடு என்னுந்தலைப்பின் கீழ் - பாங்கற் கூட்டம் நிகழாதாயின் இடந்தலைப்பாடு நிகழும், இடந்தலைப்பாடு நிகழாதாயின் பாங்கற்கூட்டம் நிகழும். மதியுடம் படுத்தல் என்னுந் தலைப்பின்கீழ் - இரண்டனுள் ஒன்றாற் சென்றெய்திய பின்னர்த் தெருண்டு வரைதல் தலை; தெருளானாயின் அவள் கண்ணாற் காட்டப்பட்ட காதற்றோழியை வழிபட்டுச் சென்றெய்துதல் முறைமையென்ப. 175ஆம் பாடல் உரையில், (காமம் மிக்க கழிபடர் கிளவி முதலிய) இவற்றைத் தலைமகன் கேட்பின் வரைவானாம்; தோழி கேட்பின் வரைவு கடாவுவாளாம்; கேட்பாரில்லையாயின் அயர்வுயிர்த்துத் தானே ஆற்றுதல் பயன். 293ஆம் பாடலுரையில் கிளிகடியும் பருவம் என்றதனால் கற்பினொடு மாறுகொள்ளாமை முதலியன கூறினாளாம்.

மெய்ப்பாடும் பயனும்: 

திருக்கோவையார் பாடல் தோறும் மெய்ப்பாடும் பயனும் பேராசிரியரால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. மெய்ப்பாட்டொடு பயனை எடுத்துக் காட்டும் சிறப்பினைப் பிற்கால உரையாசிரியருள் நற்றிணைக்கு உரைவகுத்த நாராயணசாமி ஐயரிடமே காண்கின்றோம்.

மெய்ப்பாடுகளை நுணுக ஆராய்ந்து திருக்கோவையார் பாடல்கள் சிலவற்றில், அழுகையைச் சார்ந்த நகை, அழுகையைச் சார்ந்த இளிவரல், அழுகைச் சார்ந்து வருத்தம் பற்றிவந்த இளிவரல், அழுகையைச் சார்ந்த பெருமிதம், அழுகையைச் சார்ந்த உவகை, இளிவரலைச் சார்ந்த நகை, இளிவரலைச் சார்ந்த பெருமிதம், மருட்கையைச் சார்ந்த அச்சம்,  மருட்கையைச் சார்ந்த பெருமிதம், அச்சத்தைச் சார்ந்த நகை, அச்சத்தைச் சார்ந்த இளிவரல், அச்சத்தைச் சார்ந்த மருட்கை, அச்சத்தைச் சார்ந்த பெருமிதம், பெருமிதம் சார்ந்த நகை, பெருமிதம் சார்ந்த மருட்கை, உவகையைச் சார்ந்த அழுகை, உவகையைச் சார்ந்த மருட்கை, உவகையைச் சார்ந்த பெருமிதம், உவகையைச் சார்ந்த வெகுளி என்று இரண்டு மெய்ப்பாடுகளை விரவிக்கூறியுள்ள சிறப்புப் பேராசிரியருக்கே உரியதாகும்.