பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
68

திருக்கோவையார் - ஆராய்ச்சியுரை

சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன்,
தலைவர், அனைத்துலகச் சைவசித்தாந்த ஆராய்ச்சி நிலையம்,
தருமபுரம்.

ஆளுடைய அடிகளாகிய மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவை ஆகிய இவ்விரு ஞானப் பனுவல்களும் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பெற்றிருக்கின்றன. கோவை என்றால் திருச்சிற்றம்பலக் கோவையே கோவை. ஆகவே இந்நூல் கோவை என்றும் கோவையார் என்றும் வழங்கி வந்தது. திரு என்ற அடைமொழியோடு கூடி இந்நூல் திருக்கோவையார் ஆயிற்று. திருத்தொண்டர் புராணம், பெரியபுராணமாயினதை ஈண்டு நினைவு கூர்தல் பொருத்தமுடையது.

திருக்கோவையாரை மணிவாசகப் பெருமான் அருளவில்லை என்று பெரியவர் மு. அருணாசலம் உள்ளிட்ட ஒரு சிலர் கூறுவர். இது பிழையுடைய கருத்து. முப்பெரும் புலவர்கள் - இவர்கள் அருளாளர்களும் ஆவர் - மாணிக்கவாசகரே திருச்சிற்றம்பலக் கோவையை அருளியவர் என்று அறைந்துள்ளனர்.

இம்மூவரில் முதல்வர் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள கோயில் திருப்பண்ணியர் விருத்தம் எனப் பெயரிய பனுவலின் ஆசிரியராகிய நம்பியாண்டார் நம்பிகள் ஆவர். இப்பனுவலின் 58ஆம் பாடல் பின்வருமாறு:

    வருவா சகத்தினில் முற்றுணர்ந்
            தோனைவளர் தில்லைமன்னைத்
        திருவாத வூர்ச்சிவ பாத்தியன்
            செய்திருச் சிற்றம்பலப்
        பொருளார் தருதிருக் கோவைகண்
           டேயுமற் றப்பொருளைத்
        தெருளாத வுள்ளத் தவர்கவி
           பாடிச் சிரிப்பிப்பரே.

(தி.11 திருப்பண்ணியர் விருத்தம் பா. 58)