| இவ 
ஆராய்ச்சியுரை 
இவ்வொரு பாடல்மூலம் திருக்கோவையாரைப்
பாடியவர் மாணிக்கவாசகர் என்றும், அவர்தம் பிள்ளைத் திருநாமம் சிவபாத்தியன் என்றும் நம்பியாண்டார்
நம்பிகள் உலகத்திற்கு அறிவித்துள்ளார். 
இரண்டாமவர், திருக்கோவையாருக்கு
உரை வரைந்த பேராசிரியர் ஆவார். இவர் கோவையாரின் முதற்பாடலுக்கு உரை வரையத் தொடங்கி,
எடுத்த எடுப்பிலேயே, “திருவாதவூரடிகள் இத்திருக்கோவையை என்னுதலி யெடுத்துக் கொண்டாரோ வெனின்”
என்று வினவி, மேலும் தம் கடாவிற்கு விடை வழங்குமுகத்தான், 
“திருவாத வூர்மகிழ் செழுமறை முனிவர்ஐம்பொறி கையிகந் தறிவா யறியாச்
 செம்புலச் செல்வ ராயினர் ஆதலின்
 அறிவனூற் பொருளு முலகநூல் வழக்குமென
 இருபொருளு நுதலி யெடுத்துக் கொண்டனர்”
 
என்றும் கூறியுள்ளார். 
மூன்றாமவர் குமரகுருபர சுவாமிகள்
ஆவார். இப்பெருமான் தாம் அருளிய சிதம்பர மும்மணிக் கோவை 23ஆம் செய்யுளில், திருக்கோவையாரை, 
“ஐந்திணை யுறுப்பில் நாற்பொருள்
பயக்கும்காமஞ் சான்ற ஞானப் பனுவல்”
 
என்று அருளியுள்ளார். 
1997இல் தருமை ஆதீனம் வெளியிட்ட
திருவாசகத்திற்கு ஓர் ஆராய்ச்சியுரை வரையும் பேறு எளியேனுக்குக் கிட்டியது. இவ்வுரையில் மணிவாசகரே
திருக்கோவையாரின் ஆசிரியப் பெருமான் என்று யான் காட்டியிருக்கிறேன். 
பதிப்பு வரலாறு 
இனி, திருக்கோவையார் பதிப்பு
வரலாறு பற்றிச் சில செய்திகளும், மேலும் சில தொடர்புடைய செய்திகளும் காண்போம். 
முதன் முதலில் அச்சில்
வந்த திருமுறை திருவாசகமே. அதை அடுத்து வந்த நூல் திருச்சிற்றம்பலக் கோவையாரே. திருவாசகம்
1835இலும், திருக்கோவையார் 1841இலும் வெளிவந்தன. |