நல
ஆராய்ச்சியுரை
நல்லமுறையில் வெளியிட்டார்கள்.
இதன் முகப்புப் பக்கத்தில் “பேராசிரியர் உரையைத் தழுவி எழுதப்பட்ட துறை விளக்கம் முதலியவற்றோடு
கூடிய சுத்தப் பதிப்பு” என்று அச்சிடப்பட்டிருக்கிறது. துறை விளக்கம் அனுபந்தமாக இணைக்கப்பட்டிருக்கிறது.
400 பாடல்களுக்கான விளக்கம் 94 பக்கங்களில் தரப்பட்டிருக்கிறது. இந்நூலில் கிளவிக் கொத்தும்
இணைக்கப்பட்டிருக்கிறது. இந்நூலின் பதிப்பாசிரியர் ராவ்பகதூர் வீ. பவானந்தம் பிள்ளை ஆவார்.
திருக்கோவையாருக்கு உரை வரைந்தவர் நச்சினார்க்கினியர் அல்லர் என்றும், உரையாசிரியர் பேராசிரியர்
என்றும், அதற்கான ஆதாரங்கள் பிரயோ விவேக உரையில் பரக்கக் காணப்படுகின்றன என்றும்
பிள்ளை அவர்கள் காட்டியிருக்கிறார்கள்.
கா. நமசிவாய முதலியார் அவர்கள்
திருவாசகம், திருக்கோவையார் ஆகிய இரு நூல்களையும் ஒரு புத்தகமாக, 1927இல் சென்னையில்
வெளியிட்டார்.
1939-இல் (பிரமாதி ஆண்டு, மார்கழி
மாதம்) சைவ சித்தாந்த மகாசமாஜம், சோமசுந்தரம் செட்டியார் வரைந்த அரும்பொருள் விளக்க
உரையோடு திருவாசகம், திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகிய நூல்களை ஒரு புத்தகமாக
வெளியிட்டது. தனிப்பிரதி விலை ஒரு ரூபாய் இரண்டணா என்றும், 8 பிரதிகள் விலை ஏழு ரூபாய் நாலணா
என்றும் இதில் குறிக்கப்பட்டிருக்கின்றன.
இதே ஆண்டு திருக்கோவையார், திருவிசைப்பா,
திருப்பல்லாண்டு ஆகிய மூன்று நூல்களும் ஒரு புத்தகமாக சோமசுந்தரம் செட்டியார் வரைந்த
அரும்பொருள் விளக்க உரையோடு வெளிவந்தது. தனிப்பிரதி விலை ஒன்பது அணா, 10 பிரதிகள் விலை
ரூபாய் நான்கும், அணாக்கள் பத்துமாம்.
பேராசிரியர் உரை தவிர
வேறு சில உரைகளும் திருக்கோவையாருக்கு ஏற்பட்டிருந்தன; எனினும் 1951ஆம் ஆண்டு வரை வேறு ஓர்
உரை வெளிவரவே இல்லை. இச்சூழ்நிலையில் தஞ்சை மகாராஜா ஸ்ரீ சரபோஜி சரசுவதி மகால் நூல் நிலையத்தில்
வேறு ஓர் உரை அடங்கிய சுவடியின் இருப்பு உணரப்பட்டது. இந்நூல் நிலையத்தார் அதனை அச்சிடமுன்
வந்தனர். பதிப்பாசிரியர் பணியை ரா. விசுவநாத ஐயர் மேற் கொண்டார். இவ்வுரையில், பேராசிரியர்
உரையில் காணப்பட்ட விளக்கமோ, இலக்கண முடிபோ இல்லை. எனினும், போற்றத்தக்க நயங்கள் பல
இதில் அமைந்திருக்கின்றன.
|