பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
78

ஆராய்ச்சியுரை

தான் ஆணாகச் சிவன் பெண்ணாகச் சிந்திக்க வைக்கின்ற அநுபவத் திருநூல் திருக்கோவையார்” என்று நாட்டுகிறார்.

1966இல் எட்டாந்திருமுறை முழுவதும் ஒரு புத்தமாகத் தருமையாதீனத்தால் வெளியிடப்பட்டது. நூல்களுக்குக் குறிப்புரை வரைந்தவர் சி. அருணைவடிவேல் முதலியார் அவர்கள். இவர் பெரும்பாலும் பேராசிரியர் உரையையும், சிறுபான்மை பழைய உரையையும் தழுவியே குறிப்புரை வரைந்துள்ளார். அங்கங்கும் சைவ சித்தாந்தக் கருத்துக்களைக் காட்டியபடியே இவ்வுரை செல்லுகிறது. திருக்கோவையாருக்கான கொளுக்கள் கோவையாரின் உரைகளுக்கு முற்பட்ட காலத்தில் தோன்றியவை என்பதே முதலியார் அவர்களின் கருத்தாகும். திருக்கோவையாரின் கிளவிகளுக்கு அமைந்த நூற்பாக்கள் பழைய உரையாசிரியர் உரையுள் காணப்படவில்லை. ஆகவே, அவை பேராசிரியர் உரையுள் முதற்பாட்டுரைக்கண் காணப்படும் உரைப்பாயிர நூற்பாப் போலப் பேராசிரியராலே செய்யப்பட்டன என்று கருதுகிறார் முதலியார். மேலும் அவர் கொளுக்களில் பல இடங்களில் முன்னைய இரண்டு உரைகளிலும் பெரிதும் வேறுபட்ட பாடங்கள் காணப்படுகின்றன என்றும் கூறுகிறார்.

சென்னை வர்த்தமானன் பதிப்பகத்தினர், “மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருக்கோவையார்” என்ற நூலை 1995இல் வெளியிட்டனர், இதன் உரையாசிரியர் எம். நாராயண வேலுப்பிள்ளை என்பவராவார். இவர் ஓர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர். இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1998இல் வெளிவந்தது.

மணிவாசகர் திருப்பெருந்துறையில் சிவபோதம் உற்றார். சுவாமிகளே “திருவார் பெருந்துறைச் செல்வனாகிக், கருவார் சோதியிற் கரந்த கள்ளமும்” என்று கீர்த்தித் திருவகவலிலும், “உருகு தலைச்சென்ற வுள்ளத்து மம்பலத் தும்மொளியே பெருகுதலைச் சென்று நின்றோன் பெருந்துறை” என்று திருக்கோவையார் பாடல் 104இலும் அருளியிருக்கிறார். ஆகவே, அடிகள் வரலாற்றோடு திருப்பெருந்துறை பிரிக்க முடியாதபடி அத்துவிதப்பட்டிருப்பதை அருளாளர்கள் நன்கு உணர்வர். இவ்வூர் பற்றியும், இதன் வரலாறு பற்றியும், தெரிவிக்கும் புராணங்கள் வடமொழியில், ஸ்ரீ ஆதீனகலாச மஹாத்மியம், பிருஹத் தீர்த்த மஹாத்மியம் அஷ்டாத்தியாயி என மூன்று உள்ளன என்பர்6.


    6 ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம், உ.வே.சாமிநாதையர் பதிப்பித்தது (1913, இரண்டாம் பதிப்பு) முகவுரை, பக்கம் 5.