மேலும், இத்தலத்திற்குத் தமிழில்
மூன்று புராணங்களும், திருப்பெருந்துறை யமகவந்தாதி, சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ் என இரண்டு
பிரபந்தங்களும் உள்ளன. அம்மூன்று புராணங்களில் ஒன்று, ஸ்ரீ முன்வேலப்ப தேசிகருடைய சீடராகிய ஸ்ரீ
சாஸ்திரம் சாமிநாத முனிவரால் இயற்றப்பட்டது. அதன் பெயர் திருப்பெருந்துறைப் புராணம் என்பதாம்.
இப் புராணத்தின் பாயிரம் வாயிலாக இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. (1) இப்புராணம் தஞ்சை
மன்னர் துளஜேந்திரர் விருப்பப்படி இயற்றப்பட்டது. (2) இப்புராணத்தை இயற்றுவதற்கு முன் சாமிநாத
முனிவர் திருப்பெருந்துறைக் கலம்பகம் என்று ஒரு நூலை இயற்றியுள்ளார். “இக்கலம்பகம் இப்பொழுது
கிடைக்கவில்லை” என்று தமிழ்த்தாத்தா கூறுகிறார்7.
இரண்டாவது புராணம், திருவாவடுதுறை
ஆதீனத்தில் 12ஆம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பலத் தேசிகருடைய சீடராகிய
ஸ்ரீ சுந்தரலிங்க முனிவரால் இயற்றப்பட்டது. இதன் பெயர் ஆதி கைலாய மான்மியம் என்பதாம்.
மூன்றாவது புராணமும், திருப்பெருந்துறைப்
புராணம் என்ற மகுடமே பெற்றிருந்தது. 850 பாடல்கள் கொண்ட நூலிது, “இது செய்யப்பட்ட காலம்
சகாப்தம் கருரு0 என்பது மட்டும் இதன் பாயிரத்தால் தெரிகின்றதேயன்றி, வேறொன்றும் தெரிந்திலது”
என்று தமிழ்த் தாத்தா அறிவிக்கின்றார்8.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம் தமிழ்த்தாத்தாவால் 1892இல் அச்சுருவம் பெற்றது.
புராணங்களிலும், மான்மியங்களிலும்
திருக்கோவையார் பற்றிக் கூறப்பட்டிருப்பவை மேலெழுந்த வாரியாகவே உள்ளன. சிவபெருமான் வேதியர்
உருக்கொண்டு வந்து கோவையாரைத் தாமே தம் கைப்பட எழுதினார். என்ற ஒரு செய்தி மட்டுமே
பிள்ளை அவர்களால் கூறப்பட்டிருக்கிறது.
7
ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய
திருப்பெருந்துறைப் புராணம், உ.வே.சாமிநாதையர் பதிப்பித்தது (1913, இரண்டாம் பதிப்பு) பக்கம்
5.
8
ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்
பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம், உ.வே.சாமிநாதையர் பதிப்பித்தது
(1913, இரண்டாம் பதிப்பு) பக்கம் 6.