பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
81

த

ஆராய்ச்சியுரை

திருக்கோவையார் இயல்பு என்ற நூலின் ஆசிரியர் இவர். இந்நூல் சென்னை, பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி என்ற நிறுவனத்தால் அச்சிடப்பட்டது. அச்சுப்பதிப்பு 1936இல் நடந்தேறியது. இந்நூலுக்கு, அந்நாளில் நவசக்தி பத்திரிகையின் ஆசிரியராகச் செயல்பட்ட திரு. வி. கலியாணசுந்தர முதலியார் ஓர் அணிந்துரை அளித்திருக்கிறார்.

நூலாசிரியர் தம்முகவுரையில் கூறிய உண்மைகள் பின்வருமாறு: “மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார் சங்க நூற்களுள் ஒன்று அன்று, எனினும், அவற்றோடு ஒன்றாக வைத்து எண்ணும் பெருமை இதற்கே உண்டு. இந்நூலின் உயர்வை உணர்தற்குச் சங்கநூற் பயிற்சி பெரிதும் வேண்டும். செய்யுள் நூற்களில் பெரும் பயிற்சியுடையோர்க்கே திருக்கோவைச் செய்யுட்களின் இனிய எளிய தண்ணிய நடையின் செம்மை நனி விளங்கும்.”

நம்பியாண்டார் நம்பிகள், பேராசிரியர், குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் போற்றி உள்ள திருக்கோவையாரை ஒரு பசுநூல் என்று கொள்ளுதல் முறையன்று. என்றாலும் இப்பனுவலைக் குறைத்துப் பேசுவோர் இருக்கவே செய்கின்றனர். 1992இல் எட்டாம்  திருமுறை என்ற நூல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. 108 பக்க அளவில் திருவாசகம் பற்றியும், 11 .5 பக்க அளவில் திருக்கோவையார் பற்றியும் செய்திகள் கூறப்பட்டுள்ளன. “திருக்கோவையாருக்குத் தனிச்சிறப்புத் தர வேண்டும் என்பதற்காகப் பாடல்களுக்குத் தத்துவப் பொருள்களை வலிந்து காட்டுவாரும் உளர்” என்று ஆசிரியர் கூறியிருப்பது சைவர்களைப் புண்படுத்தும்.

திருக்கோவையார் இயல்பு என்னும் நூலுக்கு அணிந்துரை வழங்கிய திரு. வி. க. கூறுவதாவது: 

“அக இன்பம் மனமாசை அகற்றும்; இயற்கைக் கூறுபாடுகளில் அறிவைச் செலுத்தும்; அக்கூறுபாடுகளில் இறை கலந்திருப்பதைப் புலப்படுத்தும். இவ்வாறு உயிர்க்கு விடுதலை நல்கும். இப்பெற்றி வாய்ந்த அகஅன்பு, திருக்கோவையாரில் ததும்பி வழிகிறது.

“திருக்கோவையார் வாழ்வுக்குரிய இயற்கை நூல்; இன்ப அன்புக்குரிய அகநூல்; வீடு பேற்றிற்குரிய ஞான நூல். அஃதொரு தமிழ்க் கோயில்; இன்ப அன்புத் தெய்வத் திருக்கோயில். அதனுள் இயற்கை - இறையின் கோலங்கள், பாட்டோவியங்களாக வரையப்