பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
84

ப

ஆராய்ச்சியுரை

பிள்ளை ஒரு மிகச் சிறந்த திருமுறை ஆய்வாளர். திருக்கோவையாரை முழுமையாக உரைநடையில் தந்த பெரியவர் அவர். அவரது “திருக்கோவையார் உரைநடை”யை 1970இல் கழகம் வெளியிட்டது16. இந்நூலின் பதிப்புரையில் ஓர் அற்புதமான தகவல் காணப்படுகிறது. “இத் திருக்கோவையார் நானூறு தெய்வப் பாடல்களைக் கொண்டு விளங்குகின்றது. (இந்நூல்) ‘திரு’ எனத் தொடங்கி ‘ஊதியம்’ என்று நிறைவுறுகின்றது17”. திரு என்றால் செல்வம் என்று பொருள். செல்வம் என்பது செல்வன் கழல் ஏத்தும் செல்வமே. மணிவாசகரும் சிவபுராணத்தில்,

    “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
     செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்}
     பல்லோரும் ஏத்தப் பணிந்து”

என்று அருளியுள்ளார். திருக்கோவையாரை ஓதுவதால் திருவே ஊதியமாக விளையும்.

தணிகை மணி அவர்கள் திருக்கோவையார் ஒளிநெறி18 என்றதோர் அற்புத நூலின் ஆசிரியருமாவார். திருக்கோவையாரின் அருமை பெருமைகள் இந்நூலில் 54 தலைப்புகளில் தொகுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இந்நூல் போற்றிப் பயிலப்பட வேண்டிய நூல். திருக்கோவையாரில் அடங்கியுள்ள கரந்துறைப் பாடல்கள் 256 முதல் 259 முடிய உள்ள பக்கங்களில் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. திருக்கோவையார் பாடல்களில் 28 குறட்பாக்கள் அடங்கியுள்ளன. காட்டாக ஒன்று காண்பம். பாடல் 56 பின்வருமாறு :

தாரென்ன ஓங்குஞ் சடைமுடி மேல்தனித் திங்கள்வைத்த
    காரென்ன ஆகுங் கறைமிடற் றம்பல வன்கயிலை
    ஊரென்ன என்னவும் வாய்திற வீர்; ஒழி வீர்பழியேற்
    பேரென்ன வோஉரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே. 

இப்பாடலில் “ஊரென்ன என்னவும் வாய்திற வீர்பழியேல், பேரென்ன வோவுரை யீர்” என்ற குறள் கரந்துறைகிறது. இது போல் திருக்கோவையாரில் இன்னிசை வெண்பாக்களும், கொச்சகக் கலிப்பாக்களும் அகவல்களும் கரந்துள்ளமை இவரால் நன்கு


16.திருக்கோவையார் உரைநடை, வ. சு. செங்கல்வராய பிள்ளை, கழகம், 1970.

17.திருக்கோவையார் உரைநடை, வ. சு. செங்கல்வராய பிள்ளை, கழகம், 1970, பக்கம் 4.

18.திருக்கோவையார் ஒளி நெறி, கழகம், 1970.