பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
86

தம

ஆராய்ச்சியுரை

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் சிவதீட்சை பெற்றவர். சிவபூசைச் செம்மல். திருமுறைகளில் அவருக்கு எல்லையற்ற ஈடுபாடு உண்டு. அவர் திருக்கோவையாரை நன்கு ஓதியவர். தாம் பதிப்பித்த பல நூல்களில் குறிப்புரைகளில் திருமுறைகளிலிருந்தும், மெய்கண்ட சாத்திரங்களிலிருந்தும் பலப்பல மேற்கோள்கள் வழங்கியுள்ளார். அப்பெரியாருக்கு உரையோடு கூடிய திருக்கோவையார் சுவடி ஒன்று கிட்டியது. உரையாசிரியர் பெயர் மணக்குடவர். இவர் திருக்குறளுக்கு உரைவரைந்த மணக்குடவரின் வேறானவர். திருக்கோவையாருக்கு வரையப்பட்ட கொளுக்களுக்கும் இவர் உரை வரைந்துள்ளார். பெற்ற சுவடியைச் சிறப்பாகப் பதிப்பிக்கக் கருதிய ஐயர் அவர்கள் பலப்பல செய்திகளைச் சேகரித்தார். இங்கு ஒன்றைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ஐயரே பதிப்பிக்காமல், ஆனால் ஐயரே பதிப்பிற்குச் சமைவாக அமைத்து வைத்திருந்த பல நூல்களை ஐயர் பெயர் தாங்கிய நூல்நிலையம் பதிப்பித்து வருகிறது. இதற்காக நிலையத்தாரைப் பாராட்ட நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். என்றாலும், இவ்வாறு பதிப்பிக்கப்பட்ட நூல்கள் எல்லாம் ஐயரின் பதிப்புகளின் தரத்தை எட்டவில்லை. ஐயர் நூல் நிலையம் வெளியிட்ட “மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த திருச்சிற்றம்பலம் கோவையார் (மணக்குடவர் உரை)22“ என்ற நூலும் நான்முன் சொன்ன கருத்துக்கு விதிவிலக்கு அன்று. இந்நூலில் “சிற்றாராய்ச்சியில் சில” என்ற தலைப்பில் பல அருமையான செய்திகள் உள. உலக சுந்தர முதலியார் பாடிய மாணிக்கவாசக வெண்பாப் பாடல்களும் இந்நூலில் இணைக்கப்பட்டிருக்கின்றன. கொளுக்களுக்கான உரை தனிப் புத்தகமாகவே வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கிளவித் தொகையும், அருஞ்சொல் அகராதியும் உள்ளன.

உரையாசிரியரான மணக்குடவர். திருக்குறள் உரையாசிரியரான மணக்குடவருக்கும் காலத்தால் முற்பட்டவர். பேராசிரியர் உரையைக் காட்டிலும் சில இடங்களில் இவர் சற்று விரிவாகவே உரை கண்டிருக்கிறார். துரதிருஷ்டவசமாக ஐயர் பெற்ற சுவடியில் பாடல் 39 முதல் 60 வரையிலும் பாடல் 337 முதல் 400 வரையிலும் உள்ள பாடலுக்கான உரை காணப்படவில்லை. ஆகவே இச்செய்யுள்களுக்கு ஐயர் நூலகத்தில் இருந்த வேறு ஒரு சுவடியிலிருந்து பதிப்பாசிரியர் பதவுரையைச் சேகரித்துத் தந்திருக்கிறார்.


    22மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த திருச்சிற்றம்பலக் கோவையார் (மணக்குடவர் உரை), மாகமகோபாத்தியாய, டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், பெசன்ட் நகர், சென்னை-90, 1995. பக்கம் 277 முடிய ஒரு புத்தகமாகவும், பக்கம் 278 முதல் 386 முடிய மற்றொரு புத்தகமாகவும் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.