பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
96


சிவமயம்

மாணிக்கவாசகர் வரலாறு1

(அகச்சான்றுகளுடன்)

திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்
வித்துவான் வி. சா. குருசாமி தேசிகர்
பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.

எழுதரு மறைகள்தேறா இறைவனை எல்லிற் கங்குற்
  பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாது செய்து
  தொழுதகை தலைமீ தேறத் துளும்புகண் ணீருள் மூழ்கி
  அழுதடி அடைந்த அன்பன் அடியவர்க் கடிமை செய்வாம்.

-திருவிளையாடற் புராணம்.

செந்தமிழ் மணமும் சிவமணமும் ஒருங்கே கமழும் திருநாடு தென்பாண்டி வளநாடு, இந்நாட்டை அணிசெய்வது, “புனல்யாறு அன்று அது பூம்புனல்யாறு’ (சிலப்.புறஞ்சேரி, 174) எனப் புலவர்களால் போற்றப்படும் வையை யாறு ஆகும். இந்நதி வரலாற்றுச் சிறப்பும், புராண இதிகாசச் சிறப்புக்களும் உடையது.

திருவவதாரம் : 

வையை யாற்றங்கரையில் மதுரை மாநகரத்திலிருந்து 12 கி.மீ. தெலைவில் திருவாதவூர் என்ற தலம் உள்ளது. இத்தலத்தில் இறைவன் வாதபுரீசுவரர் என்னும் திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளார். இத்தலம் வாயு பூசித்த காரணத்தால் வாதபுரம் என வழங்கப் பெறுகிறது. இந்நகரில் அமாத்திய அந்தணர் குலத்தில் சிவநெறி பிறழாச் சிந்தையாளராகிய அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் சம்புபாதா சிரயர். அவர் மனைவியாரின் பெயர் சிவஞானவதி என்பதாகும். இவ்விருவரும் இல்லறம் வழுவாது ஒழுகிவரும் நாளில் தென்னாட்டில் புறச் சமயமாகிய புத்தம் மேலோங்கி இருந்தது. சைவ


1இவ் வரலாறு திருவாதவூர் புராணத்தைத் தழுவி எழுதப் பெற்றதாகும்.