பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
97

சமய வளர

மாணிக்கவாசகர் வரலாறு

சமய வளர்ச்சி குன்றியிருந்தது. இறைவன் திருவருளால் இவ்விருவருக்கும், சைவம் தழைக்கவும், வேத சிவாகம நெறிகள் விளங்கவும் திருமகனார் ஒருவர் திரு அவதாரம் செய்தருளினார். தாய் தந்தையர் மகிழ்ந்து அம்மகனார்க்கு “திருவாதவூரர்” என்னும் திருப்பெயர் சூட்டினர்.

அமைச்சுரிமையேற்றல் : 

திருவாதவூரர்க்கு வயது ஏறஏறக் கலைஞானங்களும் நிரம்பின. பதினாறு வயதளவில் வாதவூரர் கலைஞானங்கள் அனைத்தும் கைவரப்பெற்றார். இவரது கல்வித் திறத்தையும் நல்லொழுக்கத்தையும், உற்றது கொண்டு மேல்வந்துறுபொருள் உணர்த்தும் அறிவின் திறனையும் கண்டு அனைவரும் வியந்தனர். அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன் என்பவனாவான். திருவாதவூரரது அறிவுத்திறனைக் கேள்வியுற்ற அரிமர்த்தன பாண்டியன் அவரைத் தனது அவைக்கு அழைத்து அளவளாவி, அவரது அறிவு நலனைக் கண்டு வியந்து “தென்னவன் பிரமராயன்” என்னும் பட்டம் சூட்டித் தனது முதன் மந்திரியாக அமர்த்திக் கொண்டான். திருவாதவூரரும் இஃது இறைவனுடைய ஆணையென்று எண்ணி அதனை ஏற்றுக் கொண்டு அமைச்சுரிமைத் தொழிலை மிக்க கவனத்தோடு இயற்றி வந்தார். வாதவூரரது அமைச்சியலால் குடிமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். வாதவூரரும், அரிமர்த்தன பாண்டியனுக்குக் கண்ணும் கவசமுமாக விளங்கி வந்தார்.

பதவியிற்பற்றின்மை : 

வாதவூரர் தமக்குக் கிடைத்த அமைச்சுரிமைத் தகுதியால் உலக அநுபவ இன்பங்களில் மகிழ்ச்சியடையவில்லை. உலக வாழ்வும் வாழ்விற் காணும் பெரும் போகமும் நிலையற்றவை என்றறிந்தமையால், அப்பதவியில் அவர்க்கு உவர்ப்புத் தோன்றியது. “கூத்தினர் தன்மை வேறு கோலம் வேறு ஆகுமாறு போல” இவர் மேற்கொண்டிருந்த அமைச்சுரிமைக்கும், இவருக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. ஒரு சிறந்த குருநாதரைத் தேடும் வேட்கை இவருக்கு மிகுந்து வந்தது. பிறவிப் பெரும் பயனை அடைதற்குரிய வழி என்ன என்பதிலேயே இவருடைய சிந்தனை சுழன்று கொண்டிருந்தது.

குதிரைகள் வாங்கச் செல்லல் : 

ஒருநாள் வாதவூரர் அரசவையில் அமைச்சராய் வீற்றிருந்தார்.