செவ்விதிகழ் பொகுட்டுச் செந்தா மரைவதனக் கொவ்வையெழிற் செவ்வாய்க் குறத்தேனை-நவ்வி விழியானை யைப்புணரும் வேளைமத வெள்ளம் பொழியானை யைமனமே போற்று.
வாய்ந்தபொருட் கொருபொருளாய்க் கலைவாணிக் கருள்மொழிக்கு மன்பாய்ப் பாரி னாய்ந்தமுது தமிழ்வடித்துக் கல்லாட மெனுமொருநூ லருளி யிட்டார் தேய்ந்தமதிச் சடைப்பரமர் கருணைபெரச் சங்கமுதுசெல்வர் வாழ்த்தக் காய்ந்தபுல னடக்கியுயர் பெருஞானம் பழுத்தருள்கல் லாடனாரே.
கல்லாடர் செய்பனுவற் கல்லாட நூறுநூல் வல்லார்சங் கத்தில் வதிந்தருளிச்-சொல்லாயு மாமதுரை ஈசர் மனமுவந்து கேட்டுமுடி தாமசைத்தார் நூறுதரம்.