Primary tabs
இந் நூலில் வரும் செய்யுட்கள் யாப்பமைப்பிலும், அணியமைப்பிலும், பொருளமைப்பிலும், தனிச் சிறப்புடையன; இங்கு, ஆசிரியப்பாவுக்குள்ள சிறப்பெல்லாம் ஒருங்கே காணலாம். ஒத்த ஒலிகளும் வேற்று ஒலிகளும் இடத்துக்கேற்ப ஒருங்கு இணைந்தும், அண்மையில் இணைந்தும், இடைவிட்டுக் கூடியும், சேய்மையில் நின்றும், யானை போன்றும், குதிரை போன்றும், மயில் போன்றும், இன்னும் பலவிதமாகவும் செய்யுளை நடத்திச் செல்லும் யாப்பு வன்மை இவ் ஆசிரியரின் வித்தக விளையாட்டு எனக் கூறலாம். தாம் மேற்கொண்டுள்ள பொருள்களின் தன்மைக்கு ஏற்ப, அவற்றைப் பல்வேறு நிலைகளில் அமைத்துக் காட்டும் பொருட் சிறப்பும், அப் பொருள்களை விளக்கும்பொருட்டு ஆசிரியர் கையாண்டுள்ள பல வகை அணிகளும், இயற்கைக் காட்சிகளையும், பிற நிகழ்ச்சிகளையும் சித்திரிக்கும் சொல்-ஓவியங்களும், பலமுறை நோக்கி நோக்கி இன்புறத்தக்கனவாம். அருகிய வழக்குள்ள சொற்கள் பெரிதும் பயில்வதாலும், செறிந்த சொல் அமைப்பாலும், இச் செய்யுட்கள் கற்போரை முதலில் வெருட்டினும், ஒரு முறை பயின்றவர்களைப் பலமுறையும் படித்து மகிழுவதற்குத் தம் பால் அழைக்கும் இயல்புடையனவாகும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரையில் இந் நூல், தமிழ்ப் புலமைக்கு இன்றியமையாதது என்னுங் கருத்தில் தமிழ்ப் புலமையில் விருப்பமுடையோர் பலராலும் பயிலப்பெற்று வந்தது. இந் நூலை நன்கு பயின்றவர்களுக்கு ஒரு சிறப்பும் இருந்தது; 'கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே' என்ற பழமொழியும் வழங்கி வந்தது. 'கல்லாடம் கற்றவனோடு மல்லாடாதே' என்ற பழமொழி இந் நூலில் வரும் வாட்போர்ப் பயிற்சியின் விளக்கம் குறித்து எழுந்தது போலும். 'பாட்டும் தொகையும்' பரவுவதற்கு முன்பு அந்த இடத்தை இந்த நூலே நிறைத்து வந்தது.
திருவாவடுதுறை மகாவித்துவான் தாண்டவராயத் தம்பிரான் சுவாமிகள், சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், இந்த நூலை மயிலேறும் பெருமாள் பிள்ளை உரையுடன் செப்பம் செய்து வைத்திருந்தார் என்றும், அதை அச்சிட்டு வெளியிடுவதற்குத் தாண்டவராய முதலியார் முயன்றார் என்றும் தெரிகிறது. பெரும்பான்மையும் இப்போது கிடைக்கக் கூடியனவான சுவடிகள் இந்தச் சுவடியின் படிகளே என்று எண்ண வேண்டியும் இருக்கிறது. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இந்த நூலை (மூலம்) 1868 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிட்டார்கள். பின்னர், 1872ஆம் ஆண்டு புதுவை க. சுப்பராய முதலியாரவர்கள், இந் நூல் மூலமும், 37 செய்யுட்களுக்கு மயிலேறும் பெருமாள் பிள்ளை உரையும், மூன்று செய்யுள் நீங்கலாக மற்றவைகளுக்குத் தாம் எழுதிய உரையுமாகச் சேர்த்து வெளியிட்டார்கள். அதன் பின்னர், 1911ஆம் ஆண்டு, காஞ்சீபுரம் வித்வான் இராமசாமிநாயுடு அவர்கள் முன்னுரைகளுடன் ஒரு அகலவுரையும் எழுதிச் சேர்த்து வெளியிட்டார்கள். இம் மூன்று பதிப்புக்களே இதுவரை வெளிவந்துள்ளன. இந்த முற் பதிப்புக்களும், சென்னை அரசாங்கச் சுவடி நிலையத்தில் கிடைத்த ஆறு ஏடுகளும், சென்னை அடையாற்றில் இருக்கும் டாக்டர் உ.. வே. சாமிநாதையர் நூல் நிலையத்தில் உள்ள ஏழு ஏடுகளும், இப் பதிப்பிற்குப் பயன்படுத்தப் பெற்றன. இவற்றை ஒப்பு நோக்கிப் பரிசோதித்ததில் பல பாட பேதங்கள் கிடைத்தன. அவற்றுள் தக்க பாடங்களைத் தேர்ந்து அமைத்து, சொல்-தொடர் விளக்கம், கதைக் குறிப்புக்கள், முதலியவற்றுடன் இப் பதிப்பு வெளி வருகின்றது.
இந் நூலின் மூலபாடத்தைப் பரிசோதித்துத் தக்க பாடங்களைத் தேர்ந்தும், பதிப்பிற்கு உரிய மூலப் பிரதியைத் தயாரித்தும், சொல்-தொடர் விளக்கம், கதைக் குறிப்புக்கள் முதலியவற்றைத் தக்க வகையில் அமைத்து எழுதியும், உபகரித்தவர்கள் திருவாளர் பள்ளியக்கிரகாரம் நீ. கந்தசாமிப் பிள்ளை அவர்களாவர். நூலை அச்சியற்றுங் காலத்தில் திரு. பிள்ளையவர்களோடு திருவாளர்கள் பெ. நா. அப்புஸ்வாமி, பி. ஸ்ரீ., வி. மு. சுப்பிரமணியம், மு. சண்முகம், ஆகியவர்களும் பதிப்புக் குழுவில் உடனிருந்து, நல்ல முறையில் இதனைப் பதிப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு எமது உளம் கனிந்த நன்றி உரியதாகுக.
சங்க நூற்களின் அடிச்சுவட்டில் எழுந்த இந்த இடைக்கால இலக்கியத்தைத் தமிழன்பர்கள் பெரிதும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் போற்றி இன்புறுவார்கள் என்று நம்புகிறோம்.
மர்ரே அண்டு கம்பெனி,
சென்னை 11-9-57.
வெளியிடுவோர்