மறைமொழி கணித்து நெய்பெய்து
திருமன வேள்வித்தீயினை வளர்ப்பவும் என்க.
(வி-ம்.)
நான்கெயிற்றொருத்தல்-அயிராவதம். வரைப்பகை: அன்மொழித்தொகை. இந்திரன் என்க.
இந்திரன் மலைகளின் சிறகரிந்தமையால் வரைப்பகை என்றாள். இங்ஙனமே ஞாயிற்றைப்
பனிப்பகை என்றும் முருகனைச் சூர்ப்பகை என்றும் வழங்குதலுமுணர்க. அறுகால்: அன்மொழித்தொகை.
மது-தேன். தொடை-ஒருவகை மாலை. எண்ணி என்றது மந்திரம் ஓதி என்றவாறு. எண்ணுதல்-கணித்தல்.
மணவழல்-மணவேள்வித்தீ
12-17:
புவி...........................விளைப்ப
(இ-ள்)
புவி அளந்து உண்ட திருநெடுமாலோன்-நிலத்தினை அளந்து பின்னர் உண்டருளிய நெடியோனாகிய
திருமால்; இருகரம் அடுக்கி பெறுநீர் வார்ப்ப-இரண்டு கைகளையும் கூட்டி மகட்பெறுதற்குக்
காரணமான நீர்வார்த்துக் கொடுப்பவும்; அண்டம் விளர்ப்ப-உலகமெல்லாம் விளங்கும்படி;
ஒற்றை ஆழியன்-ஒற்றையுருளையுடைய தேரினையுடைய கதிரவனும்; முயல் உடல் தண்சுடர்-முயலென்னும்
மறுவினையுடைய உடலினையுடைய குளிர்ந்த ஒளியையுடைய திங்கட்கடவுளும்; பெரு விளக்கு எடுப்ப-பெரிய
திருவிளக்குகளை ஏந்தி நிற்பவும்; விஞ்சையர் எண்மரும் புலன்கொள அளவா-விச்சாதரர்
எண்மரும் இசையினைத் தாளத்தால் அளந்து யாவரும் செவியால் இனிது நுகரும்படி; வள்ளையின்
கருவியில்-தோல் போர்த்தலையுடைய இசைக்கருவியாகிய யாழினை வருடி; பெரும்புகழ் விளைப்ப-தனது
பெரிய புகழினைப் பண்ணிற்பாடா நிற்ப என்க.
(வி-ம்.)
திருமால் நீர்வார்ப்பவும், ஞாயிறும் திங்களும் விளக்கேந்தவும், விஞ்சையர் புகழ்பாடவும்
என்க. மகளை மணமகன் பெறுதற்கு உரிமை கொடுக்கும் நீர் என்பார் பெறுநீர்வார்ப்ப
என்றார். ஒற்றையாழி: அன்மொழித்தொகை ஒற்றையாழியையுடைய தேர் என்க. முயல்-திங்கள்
மண்டிலத்திலுள்ள மறு. தன்சுடர்-திங்கள். விஞ்சையர்-விச்சாதரர். அளவா-அளந்து. புலன்கொள்ளுதல்-செவியேற்றல்.
வள்ளை-தோல். யாழின் பத்தரைத் தோலால் போர்த்தலின் அதனை வள்ளையின் கருவி
என்றாள். விளக்கழு லுருவின் விசியுறு பச்சை என்றார் பிறரும்.
18-21:
முனிவர்....................இறைவன்
(இ-ள்)
முனிவர் சென்னி செங்கரம் ஆக்க-முனிவர்கள் தம்முடைய சிவந்த கைகள் தலையின் மேலாகக்
கூப்பித் தொழா நிற்பவும்; உருப்பசி முதலியோர் முன்வாழ்த்து எடுப்ப-ஊர்வசி முதலிய
அரம்பையர் முன்னின்று வாழ்த்துப் பாடாநிற்பவும்;
|