கொழுந்து - வள்ளிநாய்ச்சியார்,
பூங்கொடி போன்ற தெய்வானையும் கொழுந்துபோன்ற வள்ளியும் என்க. கொடியோடும் கொழுந்தொடும்
என்புழிச் செய்யுளின்ப முணர்க. குறித்துக் கூறாக்கற்பம் என மாறுக. நிலைசெய்தல்-
நிலைத்திருத்தல். புண்ணியங் குமிழ்த்தாற்போன்று, கறை - களங்கம், பெருமான்- சிவபெருமான்,
மாதவர்-பெரிய தவத்தினையுடைய மெய்யடியார்
11-13:
முன்.................................உளவேல்
(இ-ள்)
முன் ஒரு நானில் - முன்னர் ஒரு நாளிலே ; உள்ளம் கரி வைத்து உடல் உயிர் நீ என உரைசெய்த
ஊரர்; தமது நெஞ்சத்தையே சான்றாக வைத்து எனதுடலுக்கு நீயே உயிர் என்று உறுதி கூறிய
நம்பெருமான்; தம்மொழி திரிந்து- தமது சொல்லினின்றும் மாறுபட; தவறு நின்று உளவேல்
- அது காரணமாக அவர்பால் குற்றம் உண்டாருமாயின் என்க.
(வி-ம்.)
முன்னொருநாள் என்றது நானும் தலைவனும் ஊழ்வினை காரணமாக எதிர்ப்பட்ட இயற்கைப் புணர்ச்சிக்
காலத்தை என்க. கரி - சான்று, திரிந்து - திரிய
14-18:
அவர்...................................கொல்
(இ-ள்)
அவர்குறை அன்றே - அஃது அவருடைய குற்றம் ஆகாது; ஒருவன் படைத்த காலக்குறிகொல் - ஒருவனாகிய
பிரமனாலே படைக்கப்பட்ட காலத்தின் இயல்போ ; அன்றியும் - அல்லாமலும் ; முன்னைத்
தியங்கு உடல் ஈட்டிய கருங்கடு வினையால் - முற்பிறப்பிலே மயங்கிய நம்முடலானது செய்த
கரிய தீவினையினால் வந்த ; காலக்குறியை - காலத்தின் குறிப்பினை ; மனந் தடுமாறி
மனம் குழம்பி ; பின்முன் குறித்த - பின்னும் முன்னும் நினைத்த ; நம் பெருமதி அழகு
கொல் - நமது பெரிய அறிவினது அழகு இருந்தபடியோ? யான் அறிகின்றிலேன் என்க.
(வி-ம்.)
முன்னொருநாள் என்றது தானும் தலைவனும் ஊழ்வினை காரணமாக எதிர்ப்பட்ட இயற்கைப்
புணர்ச்சிக் காலத்தை என்க.
(வி-ம்.)
ஊழி (பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்காழி எனப்படுவார் (குறள்-989) என்பது
பற்றி அவர் வாய்மையினின்றும் பிறழார் என்பாள் அவர் குறை அன்று என்றாள். ஊழிற்
பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் (குறள்.380) என்பதுபற்றி முன்னை
உடல் ஈட்டிய கடுங்கடு வினையால், மனந் தடுமாறிப் பின்முன் குறித்த நம் பெருமதி அழகுகொல்
என்றாள் அழகு; இகழ்ச்சிக் குறிப்பு
19-21:
நனவு.....................................ஒன்றே
(இ-ள்)
நனவு இடை நவிற்ற - நனவிலே சொல் ; கனவு இடை கண்ட- அதைக் கனவின்கண் கண்டதாலே;
|