தம்மையே மறந்தனவும்
; கிடந்தன- செயலற்றுக்கிடந்தனவும் ; எனப்பெறின்- ஆயின என்று கூறப்படுமாயின் என்க.
(வி-ம்.)
இவற்று - இவ்விரண்டுலகத்தினும், இருதிணை-உயர்திணை, அஃறிணை, இனி நிலைத்திணையும்
இயங்குதிணையும் எனினுமாம்.
31-37:
மாலை.........................குறிக்குநரால்
(இ-ள்)
மாலை - மாலைக்காலமே ; என்உயிர் உளைப்பதும் - அளியள் தமியள் பெண்ணென்றிரங்காமல்
என்உயிரை வருத்துவதும் ; அவர் திறம் நிற்பதும் -எம்மிருவர்க்கும் - பொதுவாகிய நீ
நடுநில்லாது எம்பெருமான் திறத்திலே நின்று ஒழுகுவதும் அகிய இக் குற்றங்கள் ; ஒருபுடைகிடக்க
- ஒருபுறமிருக்க ; உள்ளது மொழிமோ - யாம் வினவும் ஓர் உண்மையை நீ கூறு வானத்திலிருந்து
வந்தாய் என்று கூறின் ; வருகுறி கண்டிலன் - நீ வந்த சுவடொன்றனையும் யான் கண்டிலேன்;
மண்ணிடை எனிலோ-இம்மண்ணுலகத்திலிருந்தே வந்தாய் என்றாலோ; அவ்வயின் ஆன-அவ்விடத்தினும்
அப்படியே சுவடொன்றும் கண்டிலேன் காண் இனி ; கூடிநின்றனை எனின் - வானுலகத்தினும்
மண்ணுலகத்தினும் ஒருசேரப் பொருந்தி நின்றாய் என்றாலோ ; குறிதவறா ஆல் - உண்மையான
அடையாளம் தவறமாட்டா ; தேம்படர்ந்தனன் என்னில் - இங்ஙனமின்றி யாதானும் ஒரு நாட்டிலிருந்து
வந்தேன் என்று நீ சொல்லுவாயானால் ; திசை குறிக்குநரால் - அந்நாடிருக்கும் திசையினை
இன்னதென்று உலகினர் குறித்துக் கூறுவர் (அங்ஙனம் கூறுவாருமிலர்) என்க.
(வி-ம்.)
மாலை : அண்மை விளி, என் உயிர் உளைப்பதும் என்பது அளியளும் தமியளும் பெண்ணுமாகிய
எனக்கிரங்காமல் என் உயிரை வருத்துவதும் என்பது படநின்றது. இனி அவர்திறம் நிற்பதும்
என்பது எம்மிருவர்களும் பொதுவாகிய நீ நடுநிலைமையிற் பிறழ்ந்து அவர் சார்பில் நிற்பதும்
என்பது படநின்றது. அவர்திறம் நிற்றலாவது அவரை வருத்தாது நிற்றல், வருகுறி - வந்த
சுவடு. விண்ணினு்ம் மண்ணினும் ஒருசேரப் பொருந்தி நின்றாயாயின் அவ்வீரிடத்தும் சுவடிருத்தல்
வேண்டும் அங்ஙனம் இல்லை என்றவாறு. தேம் - நாடு. குறிக்குநர் என்றது குறிப்பார் அங்ஙனம்
குறிப்பாரிலர் என்பதுபட நின்றது.
38-39:
ஆதலின்...................................குறித்தே
(இ-ள்)
ஆதலின் - ஆதலால் ; நின்வரவு எனக்குப் புலன்பெற - நின்வரவு எனக்குப் புலனாகும்படி
; குறித்து ஓதல் வேண்டும் - சுட்டி நீ எனக்குக் கூறுதல் வேண்டும் என்க.
|