ஆரவாரித்த இராவணனுடைய;
பிலம் திறந்து அன்ன ஒருவாய் ஒருபதும்- குகையினைத் திறந்தாலொத்த பெரிய வாய் பத்தும்;
மலைநிரைத்து ஒழுக்கிய கரம் இருபத்தும்-மலைகளை வரிசையாய் வைத்தாலொத்த கைகள் இருபதும்;
விண் உடைத்து அரற்றவும்;விண்ணுலகம் உடையும்படி முறையே அழவும்; திசை உட்க முரியவும்-திசைநடுங்கும்படி
நெரியவும்; தாமரை அகவையின் சேஇதழ் வாட்டிய-தாமரைமலரின் உள்ளிடத்ததாகிய சிவந்த
இதழையும் வாடச்செய்த; திருவடி பெருவிரல் தலைநகம் நுதியால்-தனது அழகிய அடியின்கண்ணதாகிய
பெருவிரலின் நகத்தின் நுனியால்; சிறிது மலை உறுத்த- ஒரு சிறிது அம்மலையை அழுத்திய;
மதிமுடி அந்தணன்-பிறை சூடிய அறவாழி அந்தணனாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள என்க.
(வி-ம்.)
பிலம்-குகை. அரற்றுதல்-அழுதல். உட்குதல்-நடுங்குதல். மதிமுடி அந்தணன்-சிவபெருமான்.
24-29:
பொன்.....................................தீண்டலையே
(இ-ள்)
பொன் அணி மாடம் பொலிநகர்க்கூடல்-பொன்னால் இயன்ற அழகிய மாடங்களாலே பொலிவுபெற்ற
மதுரைமா நகரில் உள்ள; ஆவணவீதி அனையர்-கடைத்தெருவினை யொத்த நின்னுடைய பரத்தைமகளிர்;
அறிவுறின்-அறிவாராயின்; ஊருணி அன்ன நின்மார்பு அகம்தோய்ந்த-உருணியை யொத்த நின்
மார்பினிடத்தே புணர்ந்த; என் இணை முலை-என் இரண்டு முலைகளும்; நன்னர் இழந்தன-தமக்குரிய
நன்மையை இழந்ததுபோல; மற்றவர் கவைமனம் மாழ்கி செற்றம் நின் பகர்வர்-அப்பரத்தையர்களது
கவர்பட்ட நெஞ்சமானது நலம் இழந்து வருந்தி நின்னையும் சினப்பர்; இ கால் தீண்டலை-ஆதலால்
நீ என்னுடைய இந்தக் கால்களைத் தீண்டாதொழிக என்க.
(வி-ம்.)
பொன் அணி மாடம்-பொன்னாலியன்ற மாடம், நிழல்பட்ட மாடம் எனத் தனித்தனி கூட்டுக.
ஆவணவீதி-கடைத்தெரு. கடைத்தெருவில் எல்லோரும் சென்று பண்டம் கொள்ளுதல்போல் பரத்தையரிடத்தும்
வரையறையின்றி எல்லோரும் சென்று இன்பங் கோடலின் ஆவணவீதி அனையவர் என்றாள்.
ஊருணி-ஊர்ப் பொதுக்குளம். ஊருணியின்கண் எல்லோரும் சென்று நீருண்ணுதல் போல நின்மார்பையும்
பரத்தை மகளிரெல்லாம் பொதுஉண்பர் என்பாள் ஊருணி அன்ன நின் மார்பு
என்றாள். பரத்தையரைத் தோய்ந்த நின்மார்பைத் தோய்தலின் என்முலைகள் நலம் இழந்தாற்போல
என்னைத் தோய்த்தலின் நின்பரத்தையர் மனநலம் இழந்து வருந்துவர் என்பது கருத்து.
செற்றம் பகர்தல்-சினந்து வைதல். இக்கால் என்பது தூயவாகிய என்னுடைய இந்தக் கால்கள்
என்பதுபட நின்றது.
|