பக்கம் எண் :

மூலமும் உரையும்575



1-7: உள்.......................................பெருகலானும்

     (இ-ள்) உள் இருந்து எழுந்து புறம்பு நின்று எரியும்-உண்ணின்று மேலெழுந்து பக்கங்களிலே சுடர் வீசுகின்ற; அளவாத் திருமணி அளித்தலானும் - விலைமதிக்கப்படாத அழகிய மாணிக்கத்தைப் பாதுகாத்தலானும்; கொலை முதிர் கடமான் முதிர்முகம் படர்ந்து- கொலைத்தொழிலில் முதிர்ந்த மதயானைகள் மிகுந்த இடங்கள்தொறும் சென்று; கொழுஞ்சினை மிடைந்துகுளிரொடு பொதுளிய-தழைந்த கிளைகள் செறிந்து குளிர்ச்சியோடு தழைத்த; நெடுமரத்து இளங்கா நிலைத்தலானும்-நெடிய மரங்களையுடைய பசிய பொழில்கள் நிலைபெற்றிருத்தலானும்; உம்பர் நெடுஞ்சுனை பாசடை விரிந்த-மேலிடத்தில் பெரிய சுனையின்கண் பசிய இலைகளோடு விரிந்த; பேரிதழ் தாமரை பெருகலானும் - பெரிய இதழ்களையுடைய தாமரைமலர்கள் மிகுதலானும் என்க.

     (வி-ம்.) புறம்பு-பக்கங்கள். எரிதல்-சுடர்வீசுதல். அளவாத என்னும் பெயரெச்சத்தீறு தொக்கது. அளவாத்திருமணி விலைமதிக்கப்படாத அழகிய மாணிக்கம் என்க. கடமான்-மதயானை. மிடைதல்-செறிதல். பொதுளல்-தளர்தல்.

8-15: நெடுவிசும்பு......................கூடல்

     (இ-ள்) நெடுவிசும்பு அணவும் பெருமதி தாங்கி-பெரிய வானத்தை அளாவுகின்ற பெரிய மதியினைப் பொறுத்து; உடையா அமுதம் உறைதலானும்- அழியாமைக்குக் காரணமான அமிழ்தம் தன்னிடத்தே நீங்காதிருத்தலானும்; இளமையும் தொங்கலும் இன்பமும் ஒருகால் வாடா தேவர்கள் மணத்தலானும் - தமதிளமைப் பருவமும், மலர்மாலையும், மகிழ்ச்சியும், ஒரு காலத்தும் கெடாத அமரர்கள் பொருந்தியிருத்தலானும்; நூறு உடை மகத்தில் பேறுகொண்டு இருந்த புரந்தரன் போலும்-நூறு என்னும் எண்ணையுடைய வேள்வி செய்து முடித்தமை காரணமாகத் தேவர்களுக்கு அரசனாகும் பேற்றைக் கொண்டிருந்த தேவேந்திரனைப்போலும் இருக்கின்ற; பொன் எயில் எறிந்த மணிவேல் குமரன் திருவளர் குன்றம்-பொன் மதில் சூழ்ந்த மயேந்திர புரியை அழித்த அழகிய வேற்படையினையுடைய முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள செல்வம் வளரா நின்ற திருப்பரங்குன்றத்தை; பேரணி உடுத்த பெருநகர்க் கூடல்-பேரணி கலனாகக்கொண்டுள்ள பெரிய நகரமாகிய மதுரையின்கண் என்க.

     (வி-ம்.) திருப்பரங்குன்றத்துக்கு இந்திரன் உவமை. இந்திரனுக்கும் குன்றத்திற்கும் பொதுத்தன்மைகள் வருமாறு: மணியுடை