பக்கம் எண் :

மூலமும் உரையும்63



4-8: அந்தணர்.......................................இவணே

     (இ-ள்) அந்தணர் உகும் நீர்க்கு-அந்தணர் தன்னை வனங்கிக் கையால் அள்ளிவிடுகின்ற நீரினால்; அருள்கரு இருந்து-தான் அருளாகிய கருவினை எய்தி; கோடா மறைமொழி நீடு உறக் காணும்-கோடுதலில்லாத அவ்வந்தனருடைய மந்திரம் நெடிது நிலை நிற்கும்படி அருள்செய்கின்ற; கதிர் உடல் வழிபோய்-ஞாயிற்று மண்டிலத்தின் உடல்வழி புகுந்து போய் மேனிலையுலகத்து நிலைத்திருத்தலோடன்றி இவ் வுலகத்தும்; கல் உழை நின்றோர்-இவ்வுலகத்தும் தமக்கென நடப்பட்ட நடு கல்லினும் நிலைத்து நின்ற மறவர்களின்; நெருப்பு உருத்து அன்ன செருத்திறல் வரைந்த-ஊழித்தீ சினந்து அழித்தாற் போன்ற பொர்த்திரத்தை எழுதிய; வாசகங் கண்டு-மொழிகளை ஓதிப்பார்த்து; மகிழ்ந்ததும் இவண்-களிப்படைந்தது இவ்விடத்திலேதான் என்க.

     (வி-ம்.) தன்னை வணங்கி நீர் உகுக்கும் அந்தணர்க்கு அருளுடையோன் ஆதலோடு அவர் மறை மொழியும் அழியாதிருக்கும்படி செய்யும் ஞாயிரு என்றவாறு. போரின்கண் இறந்த மறவர்கள் ஞாயிற்று மண்டிலத்தை ஊடுறுவிச் சென்று மேனிலையுலகத்தே நீடு வாழ்வர் என்பது நூற்றுணிவு. ஆதலின் கதிருடல் வழிபோய் நின்றோர் என்றார். கதிருடல் வழிபோய் மேனிலையுலகத்து நெடிது வாழ்தலே யன்றி இவ்வுலகத்தும் கல்லிழை நின்றோர் என விரித்துக் கொள்க. போர்க்களத்தின்கண் அஞ்சாது நின்று விழுப்புண் பட்டிறந்த மறவர்க்கு கல்நடுதலும் அக்கல்லின்கண் அம்மறவரின் பெயரும் பீடும் எழுதி வைத்தலும் பண்டைத் தமிழரின் வழக்கம். இதனை,

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
 சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று
 இருமூன்று வகையிற் கல்லொடு புணரச்
 சொலப் பட்ட எழுமூன்று துறைத்தே”        (தொல்-புறத். சூ.5)

எனவும்,

“அணிமயிர்ப் பீலி சூட்டிப் பெயர் பொறித்து
 இனி நட்டனரே கல்லும்”                    (புறநா. 264)

எனவும்,

“பெயரும் பிடு மெழுதி யதர்தொறும்
 பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்”

எனவும் வரும் பிற சான்றோர் கூற்றாலும் உணர்க.

     இங்கு மகட்போக்கிய செவிலித்தாய், பாலையின்கண் தேடிச் சென்று அங்கு ஒரு வீரக்கல் முன்னர்க் கிடந்த தலைவன் தலைவியர் அடிச்சுவட்டைக் கண்டு நின்றவள் இவ்விடத்திலே நின்று