பக்கம் எண் :

66கல்லாடம்[செய்யுள்6]



அப்பாவம் நிற்கமாட்டாமல் தோற்றது என்பது கருத்து, ஆறலை கள்வர் கொடுந்தொழிலுக்கு நஞ்சு உவமை. தலைவியின் கற்புக்கு மலையின்கண் மறைந்துள்ள மருந்து உவமை என்க. இவ்விடம் என் மகள் கற்பின் சிறப்பினைக் காட்டிய இடம் என்க.

     கறை-கறுப்பு, அணல்-கீழ்வாய், புயங்கன்-பாம்பு தழல் போன்றவிடம் என்க. அதகம்-மருந்து, அது-அச்செயல், மறம்-பாவம். எண்ணாது-ஆராயாமல். கிடைத்த-எதிர்ப்பட்ட. செருநிலை-போக்களம். கை-தொழில். கொழுந்து-தலைப்படை. சிற்றிடைப் பெருமுலை என்புழிச் செய்யுளின்பமுணர்க. கவைஇய அகத்திட்டுத் தழுவிய. காட்டுழி-காட்டுமிடம். கொடுமரக் கொலைஞர் என்றும் பாடம்.

23-24: குரவம்............................................இடனே

     (இ-ள்) இவ்விடன்-இந்த இடம்; குரவம் சுமந்தகுழல் விரித்து இருந்து-என்மகள் தன்னுடைய குராமலர்சூடி இருந்த கூந்தலை விரித்துவிட்டு அமர்ந்திருந்து; பாடலம் புனைந்த கற்பதுக்கை-இக்காலத்திற்கேற்ற பாதிரி மலரைச் சூட்டிக்கொண்ட கற்குவியல் ஆகும் என்க.

     (வி-ம்.) குரவம்: ஆகுபெயர்; குராமலர். குழல்-கூந்தல். பாடலம்; ஆகுபெயர். பாதிருப்பூ என்க. இவ்விடம் பாடலம் புனைந்த பதுக்கை என்க. பதுக்கை-கற்குவியல். அஃதாவது சிறிது அப்பாற் சென்ற செவிலி ஒரு கற்குவியலின்பால் தலைவி தலைவர் இருவர்களுடைய காற் சுவடுகளையும் பழஒய குரா மலர்களையும் கண்டு இவ்விடத்தில் தலைவி கூந்தலில் இருந்த குராமலரைக் களைந்து புதிய பாதிரி மலரை இக் கற்குவியலின் மேலிருந்து சூடிச்சென்றனள் என்று ஊகித்தபடியாம். தலைவன் தலைவியின் கூந்தலில் பாடலம் புனைந்தான் என்று கொள்ளினுமாம்.

25-28: ஒட்டு.................................இதுவே

     (இ-ள்) இது-இவ்விடம்; ஒட்டுவிட்டு உலரிய பராரை நெடு ஆகோட்டு-யானைகள் உராய்தலாலே மேந்தோல் பெயர்ந்து காய்ந்த பருத்த அடியினையுடைய நெடிய ஆமரத்தினது கிளையின்கண் இருந்த; உதிர்பறை எருவை ஊன் உணவு-உதிர்ந்த சிறகுகளையுடைய கிழக்கழுகு தன் வாயிற் பற்றியுள்ள ஊனாகிய உணவினை; வளைவாய் கரும்பருந்து-வளைந்த அலகினையுடைய கரிய பருந்தொன்று; இடை தட்டிப் பறித்து உண்ண-அக்கழுகுண்ணுதற்கிடையே தன் காலால் தட்டிப் பறித்து உண்ணா நிற்ப; கண்டு நின்று உவந்த காட்சியும்-தலைவனும் தலைவியும் அதனைக் கண்டு நின்று மகிழ்ந்த இடம் ஆம் என்க.

     (வி-ம்.) ஒட்டு-தோல். ஒட்டியிருத்தலால் தோலை ஒட்டென்றார். பராரை-பருத்த அடிமரம். பரு:அரை=பராரை