பக்கம் எண் :

மூலமும் உரையும்67



ஆ-ஆச்சா மரம். பறை-சிறகு. வளைவாய்: வினைத்தொகை. கிழக்கழுகு கொண்டுள்ள ஊனை இளமையுடைய பருந்து தட்டிப் பறித்து உண்ணுதலைக் கண்ட தலைவனும் தலைவியும் மகிழ்ந்தமைக்குக் காரணம், தலைவிக்கு நொதுமலர் வரைந்தவுடன் தலைவன் தலைவியை அந்நொதுமலர் கைக்கொள்ளாது செய்து தானே கைப்பற்றிக் கொண்டு வருகின்ற செயலை இருவரும் நினைத்தமை என்க. எருவை-கழுகு. காட்சி என்றது. கண்டு நின்ற இடத்தை.

29-34: செம்மணி....................................கடவுள்

     (இ-ள்) செம்மணிச் சிலம்பும்-மாணிக்க மலையையும்; மரகதப் பொருப்பும்-மரகத மலையையும்; ஓர் உழைக்கண்ட-ஓரிடத்தே பார்க்குங்கால்; உவகையது என்ன உண்டாகும் மகிழ்ச்சி போன்றும்; குடுமி அந்தழலும் அவண் இருள் குவையும்-கொழுந்தினையுடைய நெருப்பினையும் அவ்விடத்திலேயே இருட்குவியலையும்; கண்ட உவகையது என்ன-கண்டமையால் உண்டான மகிழ்ச்சியைப் போலவும்; முளைவரும்பகனும் அதன் இடை மேகமும்-தோற்றம் செய்கின்ற இள ஞாயிற்று மண்டிலத்தையும் அதன் ஒரு மருங்கில் முகிலையும்; கண்ட உவகையது என்ன-கண்டுழி உண்டாகும் மகிழ்ச்சியைப் போலும்; சே இதழ் முளைரியும் கார் இதழ் குவளையும்-சிவந்த இதழ்களையுடைய தாமரை மலரையும் கரிய இதழ்களையுடைய குவளை மலரையும்; ஓர் உழைக்கண்ட உவகையது என்ன-ஓரிடத்தே கண்டுழி உண்டாகும் மகிழ்ச்சி போலும் தன்னைக் காண்பார்க்குப் பெரும் மகிழ்ச்சி உண்டாகும்படி; எவ்வுயிர் நிறைந்த செவ்விகொள் மேனியில்-எல்லா வுயிர்க்கண்ணும் நிறைந்த செவ்வியைக் கொண்ட தன் திருமேனியின்கண்; அண்டப் பெரும் திரள் அடைவு ஈன்று அளித்த-அண்டங்களாகிய பெரிய கூட்டத்தைப் படைப்பு முறையானே படைத்து அவ்வண்டங்களில் வாழும் உயிரினங்களையும் பாதுகாத்தருளிய; கன்னி கொண்டு இருந்த மன் அருள்கடவுள்-என்றும் இளமையோடிருக்கும் உமையம்மையாரைத் தனதொரு கூற்றிலே கொண்டிருந்த நிலைபெற்ற அருளையுடைய இறைவனாகிய சோமசுந்தரக் கடவுளாகிய என்க.

     (வி-ம்.) செம்மணிச் சிலம்பும் தழலும் பகனும் செம்முளரியும் சிவபெருமானுக்கும், மரகத மலையும் இருட் குவையும் மேகமும் கருங்குவளையும் உமையம்மையாருக்கும் உவமைகள். மலைகள் உடம்பிற்கும் தழலும் இருட்குவையும் கூந்தலுக்கு வமைகள். பகனும் மேகமும் நிறவுவமை; முளரியும் குவளையும் கண்களுக்குவமை என நுண்ணிதின் உணர்க. செம்மணி-மாணிக்க மணி. குவை-குவியல். முளைவரும்-முளைத்துலுண்டாகிற, எனவே முளைவரும் பகன் என்றது, தேற்றம் செய்கின்ற இளஞாயிறு என்றாயிற்று. பகன்-ஞாயிறு. தைத்திங்களில்