பக்கம் எண் :

68கல்லாடம்[செய்யுள்6]



வரும் ஞாயிற்றிற்குப் பகன் என்று பெயர். இவன் உத்தராயணம் தொடங்குதலின் அவ்வாற்றானும் இளஞாயிறு ஆதலின் பதினோராயிரம் கதிர்களையுடைய இவ்விள ஞாயிற்றையே ஈண்டு இறைவனுக்கு உவமை எடுத்தார் என்க. முளரி-தாமரை. இது இறைவன் கண்களுக்குவமை. காரிதழ்க் குவளை-நீலோற்பலம். இது அம்மை கண்களுக்குவமை. ஓருழைக் கண்ட என்பதனையும் உவகையது என்ன என்பதனையும் ஏற்ற பெற்றி கூட்டிக்கொள்க. உவகையதென்ன-தன்னைக் காண்பார்க்கு உவகை உண்டாகும்படி என வருவித்தோதுக. எவ்வுயிர்க் கண்ணும் எனல் வேண்டிய உருபும் முற்றும்மையும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. அடைவு-முறை. கன்னி-உமை: கன்னியைக் கொண்டிருந்த என்க. மன்னருள்: வினைத்தொகை.

37-44: மலை.....................................இவணே

     (இ-ள்) மலை உரு கொண்ட வாள் அரக்கர் வெள்ளமும்-நீலமலை உருவங்கொண்டாற் போன்ற உடம்பினையும் வாளினையும் உடைய அரக்கர் கூட்டத்தையும்; சூரும்-சூரனையும்; புள்இயல் பொருப்பும்-பறவையின் பெயரமைந்த மலையினையும்; நெடுங்கடல் கிடங்கும்-ஆழமாகிய நெடிய கடலினையும்; ஒருங்கு உயிர்ப்பருகிய மணிவேல் குமரன்-ஒருசேர உயிர் குடித்த அழகிய வேற்படையையுடைய முருகப் பெருமான்; முதல்நிலை வாழும் குன்று உடுத்து ஓங்கிய கூடல் அம் பதியோன்-படைவீடு ஆறனுள் முதன்மையுடைய வீடாகக் கொண்டு நிலைத்து வாழாநின்ற திருப்பரங்குன்றத்தினை ஒரு பாலணிந்து உயர்ந்துள்ள நான்கு மாடங்களையும் உடைய கூடலாகிய அழகிய மதுரை மாநகரத்தை உடைய சிவபெருமானுடைய; தாள்தலை தரித்த கோளினர்போல-திருவடிகளைத் தலையிற் றாங்குதற்குக் காரணமாகிய கொள்கையினையுடைய சான்றோர் போல; நெடு சுரம் நீங்க-நெடிய பாலை நிலத்தை நீங்கவேண்டி; தம்கால் அடுந்தழல் மாற்றிய கால்குறி இவண்-தம்முடைய கால்களைச் சுடுகின்ற வெப்பத்தை ஆற்றிக்கொண்ட அடிச்சுவடுகளே இவ்விடத்திற் காணப்படுவன. ஆதலால் அவர் சென்ற நெறி இதுவேயாம் என்க.

     (வி-ம்.) மலை-ஈண்டு நீலமலை. வெள்ளம்-கூட்டம். சூர்-சூரங் புள்-கிரவுஞ்சம் என்னும் பறவை. புள்ளியல் பொருப்பு-கிரவுஞ்சகிரி என்க. முதல்-முதன்மையுடையது. அஃதாவது திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினங்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், சோலைமலை என்னும் படைவீடு ஆறனுள் முதன்மையுடைய திருப்பரங்குன்றம் என்க. கோளினர்-கொள்கையுடையோர். இறைவனுடைய திருவடிகளைத் தாஇயில் தாங்குதல் சான்றோர் பிறப்பாகிய வெம்பாலையை விரைந்து கடந்து போமாறுபோலே நெடிஞ்சுரம் நீங்க என்றவாறு. காலின் தழலை நீக்கிய குறி என்றமையால் அக்காற் சுசுவடுகள் அரிதிற் கிடைத்த ஒருமர நீழலில் நிலைத்து நின்ற