| | செய்வோர் ஏயாச் செய்யவும் படுமே சுத்தி வெள்ளியிற் றோன்றிற் றாயினுஞ் சத்துல கேதும் தாரா தருமெனின் உலகம் மித்தையென் றோரா துரைத்தனை | | 60 | நிலவும்நின் மரபு நினைந்திலை யாம்கொல் விவகா ரத்தில் வேண்டுதும் உலகம் பரமார்த் தத்தில் பகரா மென்னில் பரத்துள தேல்இவை யும்பர மார்த்தம் | ஏனெனில்; செய்வோர் ஏயாச் செய்யவும் படுமே - அந்த உபாதானஞ் சடமா யிருந்தபடியாலே அது தானாகப் பிரபஞ்சமாகாது; அந்த உபாதானத்தைக் கொண்டு செய்கைக்குக் கர்த்தாவேண்டும். அதன்றிப் பிரபஞ்சத்தில் யாதொரு பொருள்களுஞ் செய்வோரொருவரையில்லாமல் அந்தத் தொழில்கள் தானே செயற்பட்டு வருவதுமுண்டாமே; சுத்தி வெள்ளியில் தோன்றிற்றாயினுஞ் சத்து உலகேதும் தாரா - சுத்தியானது வெள்ளியாகத் தோன்றினாற்போலக் கண்டவர்களுக்கு அசத்தியமாயுள்ள பிரபஞ்சமுஞ் சத்தியமாகத் தோன்றிற் றாயினும் அறிவாயுள்ள பிரமம் சடமாயுள்ள பிரபஞ்சத்தை ஒரு பிரகாரத்தால் உண்டாக்காது; தருமெனில் - பிரமத்தின்முன் அசத்தியமாயுள்ள பிரபஞ்சமுஞ் சத்தியமாகத் தோன்று மென்னில்; உலகம் மித்தையென்று ஓராது உரைத்தனை - நீ முன்னே இந்த உலகத்தைப் பிராந்தியென்று சொன்னது விசாரியாமற் சொன்னாயாக வேண்டும்; நிலவும் நின் மரபு நினைந்திலையாம் கொல் - இப்படி மலைவு வருதலாற் பொருந்தப்பட்ட உன்னுடைய அர்த்தத்தினுடைய கிரமத்தினையும் மறந்தாயாகவேண்டும்; விவகாரத்தில் வேண்டுதும் உலகம் பரமார்த்தத்திற் பகராம் என்னில் - இந்தப் பிரமம் உபாதிகள் வசத்தினாலே தன்னைச் சீவனென்று பிரமாணம் பண்ணிக்கொண்டு நிற்கிற இந்த விவகாரதசைக்கு உலகமென்று கொள்ளப்படுமதொழிந்து நான் பிரமமென் றறிந்த பரமார்த்த தசையில் எல்லாம் பொய்யாயிருந்தபடியாலே அவ்விடத்து உலகமென்று சொல்லப்பட்டிராதென்னில்; பரத்துளதேல் இவையும் பரமார்த்தம் - இந்த உலகம் பரமார்த்தமாயுள்ள பிரமத்திலேநின்றும் உண்டானதாயின் அசத்தியமாயுள்ள பிரபஞ்சமுஞ் சத்தியமாயுள்ள பிரமமாகவேண்டும்; |