| | உடல்விடக் கடத்துட் படுவெளி போலெனில் | | 215 | விட்டென் பெறஉடற் பட்டென் படமற்று இகலற ஒருவன் இவ்வகை 1தெளிய அகிலமும் முத்தி யடைந்திட வேண்டும் அறிந்தோர் முத்தி யடைந்தோ ராயின் பிறிந்தோர் உயிர்பல பேதத் தன்றே | மேல் அவனுடைய பரமுத்தி மறுப்பு; உடல்விடக் கடத்துள் படுவெளிபோல் எனில் - பரமுத்தியானது இந்தச் சரீரம் நீங்கின விடத்து இந்தச் சரீரத்திலே நின்ற அறிவு தன்னில் ஒன்றுபட்டு நின்றது கடத்துக்குள்ளே அகப்பட்டு நின்ற ஆகாயம் அந்தக் கடமுடைந்த அவதரத்து அந்தக் கடத்துக்குள்ளே நின்ற ஆகாயமும்மற்றப் பராகாசமுந் தன்னில் ஒன்றுபட்டு நின்றாற்போலு மென்று நீ சொல்லின்; விட்டு என்பெற உடற்பட்டு என்பட - ஆகாயங் குடாகாயமாய் நின்ற காலத்து ஒரு துக்கத்தை யனுபவித்த துமில்லை, குடமுடைந்தகாலத்தும் ஒரு சுகத்தை யனுபவித்ததுமில்லை. அது போலப் பிரமமும் உடலுக்குள்ளே அகப்பட்டு நின்ற காலத்து ஒரு துக்கத்தை யனுபவித்தது மில்லையாக வேணும், இந்த உடல் விட்டகாலத்தும் ஒரு சுகத்தை யனுபவித்தமில்லையாக வேணும். இதன்றி இந்த உடலிலே நிற்கிற அறிவு பிரத்தியக்ஷமாக இப்பொழுது துக்கத்தை அனுபவித்துவிட்ட காலத்துச் சுகத்தை அனுபவித்து நிற்கையால் நீ குடாகாய ஆகாயம்போலு மென்றது அர்த்தமன்று; மற்று இகலற ஒருவன் இவ்வகை தெளிய அகிலமும் முத்தி அடைந்திட வேண்டும் - இதொழிந்தும் நீ சொன்ன சாத்திரப் பிரமாணத்திலே மாறுபாடற ஒருத்தன் நான் பிரமமென்று தெளிந்த காலத்து எல்லா அறிவுகளும் ஒன்றென்று சொல்லுகையால் சர்வான்மாக்களும் முத்தியை அடையவேண்டும்; அறிந்தோர் முத்தியடைந் தோராயின் - பிரமக்கியான முண்டானவர்கள் முத்தியை யடைந்தவர்கள், அல்லாதவர்கள் முத்தியை யடையார்களாயின்; பிறிந்தோர் உயிர் பல பேதத்தன்றே - அறிந்தவர் ளென்றும் அறியாதவர்களென்றுஞ் சொல்லுகையால் அந்தப் பிரமத்தை யொழிந்து சொல்லப்பட்ட சீவான்மவர்க்கமும் பல பேதமாயிருக்குமென்று கொள்ளுவாயாக. இது பரமுத்தியை மறுத்தது.
1. தெளியில் - பாடபேதம். |