பக்கம் எண் :

132 திருமுறைத்தலங்கள்


சனிபகவான் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில்
விடியற்காலையில் நீராடி, இம்மலையை வலம் வரின் உடற்பிணி நீங்கும்.
இதைச்சில மருத்துவர்களே மேற்கொண்டு அனுபவத்தில் உணர்ந்துள்ளனர்.

     மூவர் பாடலும் பெற்ற தலம். மணிவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க்
காட்சி தந்தருளிய தலம். அப்பெருமான் வாக்கிலும் -திருவாசகத்திலும்
இத்தலம் இடம் பெற்றுள்ளது.

     இத்தலத்திற்கு அந்தகக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம்
உள்ளது. ஊருக்குள் உள்ள கோயில் ‘தாழக்கோயில்’ என்றழைக்கப்
படுகின்றது. கோயிலின் சந்நிதி வீதியில் திருவாவடுதுறை ஆதீனக்கிளை
மடம் ஒன்றுள்ளது.

     இறைவன் - பக்தவத்சலேஸ்வரர்.
     இறைவி - திரிபுரசுந்தரி.
     தலமரம் - வாழை.
     தீர்த்தம் - சங்கு தீர்த்தம்.

     மிகப் பழமையான கோயில். நாற்புறமும் நான்கு பெரிய கோபுரங்கள்
உள்ளன - கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை.
இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம். கோயிலுக்கு வெளியே 5
தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

     சந்நிதிக்கு நேர் எதிரில் வீதியின் கோடியில் மிக்க புகழுடைய ‘சங்கு
தீர்த்தம்’ உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில்
சங்கு பிறக்கின்றது. இதிற்கிடைத்த சங்குகள் ஆலயத்தில்
வைக்கப் பட்டுள்ளன.

     மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன்
சங்கை உற்பத்தி செய்துதந்ததாகவும், அதுமுதற்கொண்டு பன்னிரண்டு
ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும்
சொல்லப்படுகிறது.

     சங்கு தீர்த்தம் - பெரிய குளம். ஒரு பாதி படித்துறைகள் மட்டுமே
செம்மையாக்கப்பட்டுள்ளன. நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை
மண்டபமும் உள்ளன.


     இக்குளத்திற்குச் சற்றுத் தொலைவில் ‘ருத்ரகோடி’ என்னும் பெயர்
பெற்ற வைப்புத் தலம் உள்ளது. குளக்கரையிலிருந்து பார்த்தாலே இக்கோயில்
விமானம் தெரிகின்றது. மிகப்பழமையானது. இங்குள்ள இறைவன் -
ருத்ரகோடீஸ்வரர், இறைவி - அபிராமசுந்தரி.