பக்கம் எண் :

134 திருமுறைத்தலங்கள்


     பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளதைப் பாராயணம் செய்தவாறே வலம்
வரலாம்.

     அம்பாளுக்கு எதிரில் ‘பிரத்யட்ச வேதகிரீஸ்வரர்’ சந்நிதி உள்ளது.
அடுத்துள்ள நடராச சபையில் உள்ள மூர்த்தி சிறியதாயினும் அழகாகவுள்ளது.
வலமாக வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்று வலப்பால் உள்ள
அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி
உட்சென்றால், உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும்
அதையடுத்து விநாயகர், சுந்தரர் முதலாகவுடைய அறுபத்துமூவர் மூலத்திரு
மேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து அறுபத்து
மூவரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. பைரவர் வாகனமின்றி உள்ளார்.

     மூலவர் தரிசனம் - சிவலிங்கத் திருமேனி (பக்தவத்சலேசுவரர்.) சதுரபீட
ஆவுடையாரில் அமைந்துள்ள அழகான மூர்த்தம். கருவறை ‘கஜப்பிரஷ்ட’
அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக ; விநாயகர், தட்சிணாமூர்த்தி,
இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உளர். சண்டேஸ்வரர்
உள்ளார். மறுபக்கத்தில் தீர்த்தக் கிணறு உள்ளது. நித்திய வழிபாடுகள்
செம்மையாக நடைபெறுகின்றன.

     சித்திரையில் பெருவிழா நடைபெறுகின்றது. கொடியேற்றம், யாகசாலை
முதலியன மலைமீது நிகழும். திருவிழாக்கள் ; அனைத்தும்
தாழக்கோயிலில்தான் சித்திரைப் பெருவிழாவில் ; மூன்றாம் நாள் உற்சவத்தில்
காலையிலும், பத்தாம் நாள் விழாவில் இரவிலும் ; சுவாமி அதிகாரநந்தியிலும்,
பஞ்சமூர்த்திகளுடன் முறையே எழுந்தருளி மலைவலம் வருவது இன்றும்
நடைபெறுகின்றது. ஆடிப்பூரப் பெருவிழாவில் பத்தாம் நாள் அன்று அம்பாள்
எழுந்தருளி மலைவலம் வருவது வழக்கம். அடிவாரத்தில் மாமல்லபுரம்
போகும் பாதையில் நால்வர் கோயில் உள்ளது. இப்பகுதி
‘நால்வர்கோயில்பேட்டை’ என்று வழங்குகிறது.

     கல்வெட்டில் இத்தலம் ‘உலகளந்த சோழபுரம்’ என்று குறிப்பிடப்
படுகிறது. தொண்டை நாட்டுக்குரிய 24 கோட்டங்களுள் இது களத்தூர்க்
கோட்டத்தைச் சார்ந்தது. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர்,
பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

     தோடுடையான் ஒருகாதில் தூயகுழை தாழ
     ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
     நாடுடையான் நள்ளிருளேம நடமாடும்
     காடுடையான் காதல் செய்கோயில் கழுக்குன்றே 
                                       (சம்பந்தர்)