பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 135


     “மூவிலை வேற்கையானை மூர்த்திதன்னை
          முதுபிணக்காடுடையானை முதலானானை
      ஆவினில்ஐந்து உகந்தானை அமரர்கோனை
          ஆலாலம் உண்டுகந்த அம்மான்தன்னைப்
      பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
          புணர்வரிய பெருமானைப் புனிதன்தன்னைக்
      காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான்தன்னைக்
          கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன்நானே."    (அப்பர்)

    ‘நீளநின்று தொழுமின் நித்தலு(ம்) நீதியால்
    ஆளுநம் வினைகள் அல்கி அழிந்திடத்
    தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்
    காளகண்டன் உறையும் தண் கழுக்குன்றமே.’       (சுந்தரர்)

  ‘பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான் உன்நாமங்கள் பேசுவார்க்கு
  இணங்கிலாததோர் இன்பமே வரும்துன்பமே துடைத்து எம்பிரான்
  உணக்கிலாததோர் வித்துமேல் விளையாமல் என்வினை ஒத்தபின்
  கணக்கிலாத் திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.’
                                           (மாணிக்கவாசகர்)

     வேதவெற்பிலே புனத்தில் மேவிநிற்கு - மபிராம
          வேடுவச்சி பாதபத்ம மீதுசெச்சை - முடிதோய
     ஆதரித்து வேளைபுக்க ஆறிரட்டி - புயநேய
          ஆதரத் தொடாத ரிக்க ஆனபுத்தி - புகல்வாயே
     காதுமுக்ர வீரபத்ர காளி வெட்க - மகுடாமா
          காசமுட்ட வீசிவிட்ட காலர்பத்தி - யிமையோரை
     ஓதுவித்த நாதர் கற்க வோதுவித்த - முனிநாண
          ஓரெழுத்தி லாறெழுத்தை யோதுவித்த - பெருமாளே.
                                          (திருப்புகழ்)

                                 -‘நன்னெறியோர்
  துன்னு நெறிக்கோர் துணையாந் தூய கழுக்குன்றினிடை
  முன்னு மறிவானந்த மூர்த்தமே.’                (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. வேதகீரீஸ்வரர் திருக்கோயில்
     திருக்கழுக்குன்றம் & அஞ்சல்
     காஞ்சிபுரம் மாவட்டம். 603 109.