சுப்பிரமணியர், கஜலட்சுமி, வீரட்டேஸ்வர லிங்கம், கண்ணப்பர், திரிபுவன சக்கரவர்த்தி அவர் மனைவி வழிபட்ட லிங்கங்கள், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. விநாயகரைத் தொடர்ந்து அறுபத்துமூவர் மூலத்திருவுருவங்களின் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் உள்ளன. கருவறை முன் மண்டபம் கடந்து செல்லும்போது நேரே மூலவர் தரிசனம். இடப்பால் அம்பாள் சந்நிதி. ஒருசேர இரு சந்நிதிகளையும் ஒரே இடத்திலிருந்து தரிசிக்கக் கூடிய அமைப்பு. மூலவர் அகத்தியர் பிரதிஷ்டை - சதுர ஆவுடையார், துவார பாலகர்கள் உள்ளனர். மூலவர் திருமேனி - பாணம் சுற்றளவு சற்று குறைவாக நீட்டுவாக்கில் உள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலம். நடராச சபை உள்ளது - எதிரில் வாயில். கோஷ்ட மூர்த்தத்தில் லிங்கோற்பவருக்கு இருபுறங்களிலும் திருமாலும் பிரம்மாவும் நின்று தரிசிக்கும் கோலத்தில் உள்ளனர். இக்கோயில் மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்பகுதி ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்தது. இங்கு வந்த ‘மதுரை இராமலிங்க சிவயோகி’ என்பவர் இம்மேட்டைக் கண்டு, மணலில் புதைந்திருந்த கோயிலின் விமானக்கலசம் மட்டும் மேலே தெரிய ; அவர் உடனே அப்போது கடலூரிலிருந்த சேஷாசல நாயுடு, இராமாநுஜலு நாயுடு, ஆயிரங்காத்த முதலியார், நஞ்சலிங்க செட்டியார் ஆகியோரை அணுகி ; செய்தி சொல்லி, அவர்களின் ஆதரவோடு, மணல்மேட்டைத் தோண்டிக் கோயிலைக் கண்டு பிடித்துக் கட்டுவித்தார் என்றொரு செய்தி அப்பகுதி மக்களால் சொல்லப்படுகின்றது. இது தொடர்பாக ; இன்னும் அம்பாள் கோயில் தெற்குப் பகுதியில் மண்மேடிட்டுப் புதைந்துள்ளதாகவும் சொல்கின்றனர். இதனால் இக்கோயிலுக்குத் ‘தம்பிரான் கண்ட கோயில்’ என்ற பெயரும் மக்களால் வழங்கப்படுகிறது. “கடலுக்கு மேற்கில், தொண்டமாநத்தத்திற்கு கிழக்கில் பெண்ணையாற்றுக்குத் தெற்கில் வெள்ளாற்றுக்கு வடக்கில் உள்ள நிலங்கள் இக்கோயிலுக்குரிய பட்டா நிலங்களாக இருந்தனவென்றும், அவைகளை அரசு எடுத்துக்கொண்டு, அதற்குரியதாக ஆண்டுதோறும் கோயிலுக்கு ரூ.600/- (ரூபாய் ஆறுநூறு மட்டும்) தருவதாகவும் தெரிகிறது.” கோயில் குருக்கள் குடும்பத்தினரின் நன்முயற்சியால்தான் இக்கோயில் செம்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றது. |